Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் தூய்மைப் பணியாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து அந்த மண்டலங்களில் பணி செய்து வந்த 1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர்.


ரிப்பன் பில்டிங்கின் வெளியே போராட்டத்தைத் தொடங்கியவர்கள், 150 நாட்களைக் கடந்து சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் என யாருமே தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார்.

"13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா?" எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.














