Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
`நீட்' எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ் வகுப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புக்குத் தேர்வான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 42 பேர் இஸ்லாமிய மாணவர்கள், ஒரு சீக்கி மாணவர், மீதமிருக்கும் 7 மாணவர்கள் இந்து மாணவர்கள்.

இந்த நிலையில், `இந்தக் கல்லூரியை வைஷ்ணவ தேவி ஆலய வாரியம் நடத்துகிறது. எனவே, இந்து பக்தர்களின் காணிக்கைகளால் நிதியளிக்கப்படும் இந்தக் கல்லூரியில், இந்துக்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும். முஸ்லிம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அது முடியாதென்றால், மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும்' என வெவ்வேறு பெயர்களில் இருக்கும் 60 குழுக்கள் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி (SMVDSS) என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்தன.
அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ``கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் 39 சதவீதமும், மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் எண்ணிக்கையில் 65 சதவீதமும் பற்றாக்குறை இருக்கிறது.
மேலும், நோயாளிகளின் வருகை (OPD) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதோடு, மருத்துவமனை படுக்கைகளில் 45 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்களில் 50 சதவீதம் மட்டுமே இருந்தன.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி15 மருத்துவ இதழ்களுக்குப் பதிலாக இரண்டு இதழ்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன. ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளும் தேசியத் தரத்திற்கு இணையாக இல்லை" எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி நிலை:
இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையால், 2025-26 கல்வியாண்டில் ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்த 50 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரையும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் மூலம் மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பு மூலம் போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற கர்னல் சுக்வீர் மன்கோட்டியா, ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற 60 அமைப்புகளின் கூட்டமைப்பான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி மூலமாகதான் இது சாத்தியமானது. இந்து யாத்ரீகர்கள் அளிக்கும் காணிக்கைப் பணத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே அம்மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதை மேளதாளத்துடன் இனிப்பு வழங்கியும், மாலை அணிவித்தும் கொண்டாடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்புக் கல்லூரி, `` எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குளிர்கால விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் பலர் விடுப்பில் இருந்தபோது, முன்னறிவிப்பின்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அதற்குள் விடுப்பில் இருந்தவர்களை அழைக்க நேரமில்லை. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிர்வாகக் குறைபாடுகளுக்கானதல்ல... அரசியல் அழுத்தத்துக்கானது." எனத் தெரிவித்திருக்கிறது.














