செய்திகள் :

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

post image

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம்.

இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது.

இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சாட்சி கையெழுத்து போட்ட கணவன்

ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார்.

அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.