கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேம...
சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டி.மணி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கொள்ளை வழக்கில் சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சி.பி.எம் கட்சியை சேர்ந்த கேரள தேவசம் போர்டு முன்னாள் அமைச்சரும், கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். கடகம்பள்ளி சுரேந்திரனின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக ஐகோர்ட் திருப்தி தெரிவித்திருந்தது. மேலும், விசாரணைக்காக இரண்டரை மாதங்கள் கால அவகாசமும் வழங்கியுள்ளது.

இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு விசாரணைக் குழு கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்திருந்தது. இன்று காலை கொச்சியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் ஆஜரான தந்திரி கண்டரரு ராஜீவரிடம் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் நெருங்கிய நட்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிலரது வாக்குமூலத்திலும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரி கண்டரரு ராஜீவருக்குமான பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து விசாரணை முடிவில் தந்திரி கைதுசெய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் முக்கிய பூஜைகளை செய்வதும், ஆசாரங்கள் மீறப்படாமல் கவனிப்பதும் தந்திரியின் கடமை ஆகும். சபரிமலை கோயில் மேல் சாந்தி ஒவ்வோர் ஆண்டும் மாற்றப்பட்டு புதிய மேல்சாந்திகள் நியமிக்கப்படுவது வழக்கம். அதே சமயம் தந்திரி என்பவர் தாழமண் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். பாரம்பர்யமாக அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தந்திரிகளாக செயல்படுவார்கள். கண்டரரு ராஜீவர் செய்துவந்த பூஜைகளை அவர் மகன் கண்டரரு பிரம்மதத்தன் மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ் மோகனரு ஆகியோர் செய்துவருகின்றனர். கண்டரரு ராஜீவரின் மகன் கண்டரரு பிரம்மதத்தனின் திருமணத்துக்கு உன்னிகிருஷ்ணன் போற்றி சென்றுவந்ததாகவும் தகவல் கிடைத்ததை அடுத்தே, தந்திரி மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு குறித்து அமலாக்கத்துறை கொச்சி யூனிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. தங்கம் கொள்ளை வழக்கில் கறுப்பு பணம் வெள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள தகவலின் அடிப்படையில் கறுப்பு பணம் வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னிகிருஷ்ணன் போற்றி எடுத்துச் சென்ற தங்கத்தை உருக்கியதாக கூறபப்டும் சென்னை ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி, பெங்களூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தன் ஆகியோரை மையமாக்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நகர்ந்துவருகிறது.

















