Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேமலதா கேள்வி
கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதையடுத்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``தலைவருக்கான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் நம் தலைவர் விஜயகாந்த். வெறும் ரசிகர் மன்றமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு, இன்று தே.மு.தி.க என்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது.
கேப்டன் இல்லாமல் நாம் இல்லை. அனைத்தும் கேப்டன்தான். கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கின்றார்.

இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு இணை வேறு கட்சியே இல்லை. நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள்.
ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப் பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது.
நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கியது இந்தக் கடலூர் மண். தமிழகம் முழுக்க நாம் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். ஆனால் நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கிய கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.
தே.மு.தி.க-வைத் தரக்குறைவாகப் பேசுவதற்கு எந்தக் கொம்பனுக்கும் தகுதி கிடையாது. அவர்களுக்கு எங்கள் தொண்டர்கள் பதிலளிப்பார்கள். 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் துவங்கிய நாள் இன்று.
அந்த நாளில் நாம் உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறோம். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த மாநாடு. தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள்.
அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன் தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெறும்.

ஏனென்றால் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. விஜயகாந்தின் குருபூஜை குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. குருபூஜை இல்லை, எந்தப் பூஜையை வேண்டுமென்றாலும் நாங்கள் நடத்துவோம்.
அதுகுறித்துக் கேட்க யாருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. ஏனென்றால் தலைவர் என்பவர் அடுத்த தேர்தலைப் பார்ப்பவர் இல்லை. அடுத்த தலைமுறையைப் பார்ப்பவர். தேர்தல் வந்துவிட்டால் பேரம் பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே… நான் பேசுவேன்.
என்ன கொள்கை… என்ன கொள்கை… எனக் கேட்கிறார்கள். இனி அவர்களிடம் சொல்லுங்கள் வெற்றி ஒன்றுதான் இனி தே.மு.தி.க-வின் கொள்கை. அதன்படி இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தே.மு.தி.க-தான் முடிவு செய்யும். தே.மு.தி.க-வை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஜெயித்துக்கொள்வீர்கள்.
ஆனால் தே.மு.தி.க-வுக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டீர்கள். இது என்ன நியாயம்? தேர்தல் களத்தில் தே.மு.தி.க-வினரைத் தவிர, உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் உழைக்கிறார்களா?
கேப்டன் வலியுறுத்திய கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல், எந்தவித ஆசாபாசங்களுக்கும் அடிபணியாமல், நேர்மையுடன் உழைக்கும் கள வீரர்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மட்டும்தான். அதை யாராவது மறுக்க முடியுமா?
பணம் கொடுத்தால்தான் உங்கள் கட்சிக்காரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவெடுத்து அறிவித்தால் போதும். எங்கள் தொண்டர்கள் வெற்றி வீரர்களாக களத்தில் நிற்பார்கள். இது எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகளுக்குத் தெரியும்.

எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச் சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன்.
மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில், நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம்.
தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்?" என்றார்.














