Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
சூடுபிடிக்கும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை; டிடிவி, ஓபிஎஸ்ஸை அரவணைக்கும் அமித்ஷா; எதிர்க்கும் EPS?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி- நயினார் சந்திப்பு
இந்தச் சூழலில்தான் இன்று (ஜன.9) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாஜக கேட்கும் சீட்களை அதிமுக தருமா, கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி போன்ற கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி?
"எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

அமித் ஷா போடும் கணக்கு
ஆனால் அமித் ஷாவின் நோக்கம் என்னவென்றால் திமுகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாவற்றையும் நம்முடைய அணிக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
அதனால் அதிமுகவில் டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முயல்கிறார்.
ஏன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்?
56 தொகுதிகளை பாஜக கேட்டு, அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்க்கு சீட்களைக் கொடுக்கப் பார்க்கிறார். எடப்பாடிக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. நாளைக்கு இவர்கள் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்.
பாஜகவிற்குத்தான் இருவரும் ஆதரவாக இருப்பார்கள். அதனால் நாம் ஏன் நம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அரவணைக்க நினைக்கும் அமித்ஷா
பாஜக அவர்களுக்கு மட்டும் 30 இடங்களைக் கேட்டால் அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் எடப்பாடி. ஆனால் மற்றவர்களுக்காக பாஜக கேட்கும் இடங்களைக் கொடுத்துவிட்டால் நாம்தான் பலவீனமாக இருப்போம் என்று நினைக்கிறார். எடப்பாடிக்கு அதிகாரம் வேண்டும்.
டிடிவியை கூட்டணிக்குள் இணைப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் இணைத்தால்தான் தென்மாவட்ட ஓட்டுகள் கிடைக்கும். அதனால்தான் அமித்ஷா அரவணைக்க நினைக்கிறார்” என்று கேள்விகளுக்கு விடை அளித்தார்.














