செய்திகள் :

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

post image

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கிரீன்லாந்து ஆசைதான் தற்போது உலக செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. வெனிசுலா அதிபர் கைதுசெய்யப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிரட்டல்களை உலக நாடுகள் அச்சத்துடன் பார்க்கின்றன. வெனிசுலாவுக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப் குறிவைத்திருக்கும் கிரீன்லாந்தில் அந்த அச்ச ரேகைப் படர்கிறது.

கிரீன்லாந்து மீதான ட்ரம்ப்பின் ஆசையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, கிரீன்லாந்து குறித்து நாம் தெரிந்துகொண்டால், இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

கிரீன்லாந்து வரைபடம்
கிரீன்லாந்து வரைபடம்

ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து, வட அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பிய நாடான டென்மார்க்குடன் இணைந்துள்ளது. சுமார் 2,166,086 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுக் கொண்ட கிரின்லாந்தின், சுமார் 81% (17.5 லட்சம் சதுர கி.மீ) நிரந்தரப் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பனி இல்லாத பகுதிகளான கடற்கரை ஓரங்களில் உள்ள நிலப்பரப்பில்தான் மக்கள் வசிக்க முடியும். எனவே, அந்தப் பகுதியில் சுமார் 56,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். கிரின்லாந்திலிருந்து 26 கி.மீ தூரத்தில் கனடா, 290 கி.மீ தூரத்தில் ஐஸ்லாந்து, 1,400 கி.மீ தூரத்தில் நார்வே, 2,500 கி.மீ தூரத்தில் தென் கிழக்கு அமெரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

1721-ல் மிஷனரி ஹான்ஸ் எகெட் காலனித்துவத்தைத் தொடங்கியபோது கிரீன்லாந்து டேனிஷ் காலனித்துவ சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டது. கிரீன்லாந்திலிருந்து கிட்டத்தட்ட 3,000 கி.மீ தொலைவில் உள்ள டென்மார்க், இரு நூற்றாண்டுகளுக்கு கிரீன்லாந்தை ஒரு காலனியாக ஆட்சி செய்தது.

1951-ல், அமெரிக்காவுடன் டென்மார்க் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கிரின்லாந்தில் ராணுவத் தளங்களை அமைத்து பராமரிக்கும் உரிமை உட்பட, கிரீன்லாந்து பாதுகாப்பில் அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வழங்கியது. எனவே, கிரீன்லாந்தில் டென்மார்க், அமெரிக்கா என இரண்டு ராணுவத் தளங்களும் உள்ளன.

டென்மார்க்
டென்மார்க்

1953-ல், கிரீன்லாந்து டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் குடிமக்களானார்கள். மேலும்,1954-ல் ஐ.நா கிரீன்லாந்தை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1979-ல், கிரீன்லந்தின் சுயாட்சி குறித்த ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு, வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை மீதான கட்டுப்பாட்டை டென்மார்க் தக்கவைத்துக் கொண்டு, கிரீன்லாந்துக்கு சுயராஜ்யத்தை வழங்கியது. இப்போதும் கிரீன்லாந்து, டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்தாலும், தனக்குத் தேவையான பள்ளிக் கல்வி, எரிபொருள் மற்றும் சமூக சேவைகளுக்காக டென்மார்க்கின் நிதி உதவியை (Subsidies) நம்பியே இருக்கிறது.

கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபோது எடுத்த முடிவல்ல. அது அமெரிக்காவின் நீண்டகால விருப்பம். 1860-ல் முதல் முறையாக கிரீன்லாந்தை வாங்க வேண்டும் எனப் பரிசீலிக்கப்பட்டது. 'கிரீன்லாந்தின் தாதுப்பொருள் வளங்கள், பாதுகாப்பு அமைப்பின் காரணமாக மிகவும் முக்கியமானதாக உள்ளது' என அமெரிக்க வெளியுறவுத் துறை 1867-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், 1946 வரை கிரீன்லாந்து குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஹென்றி ட்ரூமேன் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது, ``டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலரும், அலாஸ்காவின் சில பகுதிகளையும் வழங்குகிறோம். அதற்கு பதிலாக கிரீன்லாந்தை வழங்க வேண்டும்" எனக் கேட்டார். அப்போதே அவரின் கோரிக்கை மறுக்கப்பட்டது.

America
America

ஆர்க்டிக் பகுதிக்கும் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் இடையில் ஒரு 'ராணுவக் கோட்டை' போல அமைந்துள்ள பகுதிதான் கிரீன்லாந்து. குறிப்பாக ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ள முக்கிய பாதுகாப்புப் பெட்டகம். அதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துகிறது.

இது தவிர, அமெரிக்கா பனிப்போரின் ஆரம்பத்தில், பிட்டுஃப்ஃபிக் (Pituffik) என்ற வான்பகுதி மற்றும் ரேடார் தளம் ஒன்றை இத்தீவில் நிறுவியது. இது தற்போது விண்வெளியைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவின் வட எல்லைப் பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகிறது.

தற்போது அந்தத் தளம் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு தளமாகவும் செயல்படுகிறது. எனவே, கிரீன்லாந்தை கைப்பற்றினால், பிட்டுஃப்ஃபிக் தளத்திலிருந்து உலகின் வல்லரசு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் எளிதாகக் கண்காணிக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான துணைச் செயலாளர் ஜோஸ் டபிள்யூ. பெர்னாண்டஸ், நவம்பர் 2024-ல் கிரீன்லாந்தில் நடைபெற்ற கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மை நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, ``கிரீன்லாந்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம வளங்களின் இருப்புக்கள் அதிகளவில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன." என உரையாற்றினார்.

கிரீன்லாந்து
கிரீன்லாந்து

அதைத் தொடர்து, ராணுவ மற்றும் தொழில்துறைக்குத் தேவையான அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், கிரீன்லாந்தில் பொக்கிஷமாக கொட்டிக்கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

குறிப்பாக நவீன ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவையான அரிய வகை தாதுக்கள், நிலக்கரி, எண்ணெய், தாமிரம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமானவை அங்கு புதைந்திருக்கிறது.

தற்போது அரிய வகை கனிம பொருளாதாரத்தில் சீனா முதலிடத்தில் இருப்பதால், கிரீன்லாந்தைக் கைப்பற்றினால், சீனாவிற்குப் போட்டியாக மாறலாம் என அமெரிக்கா நினைக்கிறது. மேலும், உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயல்வதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் கிரீன்லாந்து கருதப்படுகிறது.

அமெரிக்கா மட்டுமல்ல சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் கிரீன்லாந்து மீது ஒரு கண் இருக்கிறது. சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், 2018-ம் ஆண்டு கிரீன்லாந்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு 2019-ல் திரும்பப் பெறப்பட்டது.

குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை தனக்கான ஒரு பாதுகாப்பு உத்தியாகவே கட்டமைத்திருக்கிறது. எனவே, கிரின்லாந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் போட்டியிடுகின்றன.

இதுதவிர, சமீபத்திய ஆய்வுகளின்படி, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் ஆபத்தான விகிதத்தில் பனிக்கட்டிகள் உருகியுள்ளது தெரியவந்திருக்கிறது. 1990-களில் இருந்து, இந்த இரண்டு பகுதிகளிலும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் நீரில் கரைந்துள்ளது.

பனாமா கால்வாய்
பனாமா கால்வாய்

இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, பனி உருகுவதால் புதிய கப்பல் வழித்தடங்களும், ராணுவப் பாதைகளும் உருவாகும். எனவே, கிரீன்லாந்து போக்குவரத்துக்கும் உகந்த பகுதியாக உருவாகி வருகிறது.

எனவே, கிரீன்லாந்து என்ற ஒரு பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்கா கனடா, மெக்சிகோ, கௌதமாலா, பனாமா உள்ளிட்ட நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், கியூபா, ஹைட்டி, ஜமைக்கா போன்ற கரீபியன் தீவுகளில் தன் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த முடியும் என அதிபர் ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார்.

அமெரிக்காவின் வரலாறு என்பது வெறும் போர் மட்டும் அல்ல, அதற்கு நிலங்களை 'விலை கொடுத்து வாங்கிய' (Land Deals) வரலாறும்கூட இருக்கிறது. அமெரிக்கா இன்று இவ்வளவு பெரிய நாடாக இருப்பதற்குக் காரணமே, அதன் முந்தைய அதிபர்கள் செய்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டீல்கள்தான்.

அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகள் ஒரு காலத்தில் மற்ற நாடுகளுக்குச் சொந்தமானவை.

அதிபர் தாமஸ் ஜெபர்சன் 1803, பிரான்சின் நெப்போலியனிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலருக்கு லூசியானா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கினார்.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

இதன் மூலம் அமெரிக்காவின் அளவு ஒரே இரவில் இரண்டு மடங்கானது.

1867-ம் வருடம் ரஷ்யாவிடம் இருந்து வெறும் 7.2 மில்லியன் டாலருக்கு அலாஸ்காவை அமெரிக்கா வாங்கியது. அப்போது "இது பனிக்கட்டி நிறைந்த குப்பை" எனப் பலர் கேலி செய்தார்கள். ஆனால், இன்று அங்கிருந்து கிடைக்கும் தங்கம் மற்றும் எண்ணெய் அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்து.

எல்லாவற்றையும் விலை கொடுத்து மட்டும் அமெரிக்கா வாங்கவில்லை. சில இடங்களை 'வல்லான் வகுத்ததே சட்டம்' என்ற ரீதியில் ராணுவ பலத்தாலும் பிடித்தது.

1840-களில் அதிபர் ஜேம்ஸ் போல்க் (James K. Polk) காலத்தில் நடந்த போரின் மூலம், இன்று அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களாக இருக்கும் டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா மற்றும் நியூ மெக்சிகோ ஆகியவை மெக்சிகோவிடமிருந்து பிடுங்கப்பட்டன.

அமெரிக்கா தனது வர்த்தக வசதிக்காக கொலம்பியா நாட்டின் மாகாணமாக இருந்த பனாமாவை பிரித்து, தனி நாடாக உருவாக்கி, 1914-ல் பனாமா கால்வாயைக் கட்டி முடித்தது. 1999-ல் பனாமா கால்வாய் மீண்டும் பனாமா நாட்டிடமே ஒப்படைக்கப்பட்டது. ட்ரம்ப் இப்போது சொல்வது போல, "அதை நாங்கள்தான் கட்டினோம், அது எங்களுக்கே சொந்தம்" என்ற எண்ணம் இன்றும் பல அமெரிக்கர்களிடம் உண்டு.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவின் வரலாற்று பாணியிலேயே அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பும் காய்களை நகர்த்துகிறார். ட்ரம்ப் இப்போது ஒரு "நவீன கால சாம்ராஜ்ய விரிவாக்கத்தை" கையில் எடுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலம் எனச் சொல்வதன் மூலம், "பொருளாதார ரீதியாக கனடா அமெரிக்காவைத்தான் சார்ந்து இருக்கிறது. அதனால் அவர்கள் அமெரிக்காவின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்" என மிரட்டுகிறார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது முதல் ராணுவ நடவடிக்கை வரை பேசி, தென் எல்லையைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். அதன் தொடராகத்தான் இப்போது மெகா ப்ராஜெக்டாக 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீன்லாந்து பேரக் களத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா இப்போது மேற்கு அரைக்கோளம் என்ற தனது 'பேட்டையில்' யாரும் நுழையக் கூடாது என நினைக்கின்றது. ரஷ்யாவோ, சீனாவோ இங்கு ஆதிக்கம் செலுத்துவதை விட, மோதல் வந்தாலும் பரவாயில்லை என அமெரிக்கா கருதுகிறது.

ட்ரம்ப் டார்கெட் செய்திருக்கும் இடங்கள்
ட்ரம்ப் டார்கெட் செய்திருக்கும் இடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும், அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள். டென்மார்க்கின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்கிறது.

இந்த நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்களுக்கும் பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து அவர்களைப் பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டாலர் முதல் 1,00,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை) மொத்தமாகப் பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தச் சதி குறித்து தகவலறிந்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், ``போதும்... இனி இப்படிப்பட்ட கற்பனைகள் வேண்டாம்" என அமெரிக்காவைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.

``ஒருபுறம் டென்மார்க்கின் பாதுகாப்பு ஒப்பந்தப் பங்காளியாக இருக்கும் அமெரிக்காவே அதன் இறையாண்மையை மீறி, நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நா சபையின் கொள்கைகளுக்கு எதிரானது" என ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும், அதிகாரமாகவும், அத்துமீறியும் செயல்படும் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``கிரீன்லாந்து அதன் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கிரீன்லாந்து தொடர்பான எந்தவொரு முடிவையும் டென்மார்க்கும் கிரீன்லாந்து மக்களும் மட்டுமே எடுக்க முடியும்.

ஐநா
ஐநா

அமெரிக்கா அதில் தலையிட முடியாது. ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிரிகளைத் தடுக்கவும், நாங்களும் மற்ற பல நட்பு நாடுகளும் எங்கள் இருப்பு, செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்துள்ளோம். மேலும், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதி என்பதால் அதைப் பாதுகாப்பது சர்வதேச கடமை" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கிரின்லாந்தைப் பாதுகாக்க துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கமாட்டோம் என டென்மார்க் எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாக டென்மார்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``1952-ம் ஆண்டு டென்மார்க் அரசு இயற்றிய சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி, யாராவது வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல், டென்மார்க் ராணுவ வீரர்கள் உடனடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தலாம். 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சட்டம் இன்றும் செல்லுபடியாகும். அதாவது, நாட்டின் எல்லைக்குள் அத்துமீறும் படையெடுப்பாளர்களைத் தாக்கத் தங்கள் வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், ``டென்மார்க் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டேன். கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை நேட்டோ கூட்டணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கிரீன்லாந்து பிரதமர் நீல்சன், ``அழுத்தம் வேண்டாம். இனி மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். எங்களை உங்களுடன் இணைத்துக்கொள்வது பற்றிய கற்பனைகளும் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். நாங்கள் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் இது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டத்தை மதித்துமே நடக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன்
கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன்

கிரீன்லாந்து மக்கள் இதைத் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று கருதுகிறார்கள். "எங்களை ஒரு பொருள் போல விலைக்கு வாங்க நீங்கள் யார்?" என்பதே அவர்களின் கேள்வி. 2009 முதல் அவர்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு காலனித்துவ ஆட்சிக்குள் (அமெரிக்காவிடம்) செல்ல விரும்பவில்லை. "கிரீன்லாந்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு தெளிவான எதிர்ப்பைக் காட்டுகின்றன" என கிரீன்லாந்து திரைப்படத் தயாரிப்பாளர் இனுக் சிலிஸ் ஹோக் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்காலத்திலேயே கிரீன்லாந்து தீவை வாங்க முன்வந்தார். அப்போதே அது விற்பனைக்கு அல்ல எனக் கூறப்பட்டு மறுக்கப்பட்டது. தற்போது வெனிசுலாவில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

எப்படியாவது கிரின்லாந்தைக் கைப்பற்றும் முடிவில் இருக்கும் அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்ற மக்களுக்குப் பணம் கொடுத்து ஆதரவை திரட்டுவது, அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது, அல்லது டென்மார்க்குக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து கிரீன்லாந்தை ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்டப் பல்வேறு சதி திட்டங்களைத் தீட்டிவருகிறார்.

அதிகாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள், வெறிகொண்டு நீள்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், நடப்பது என்னவென்று?!

கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேமலதா கேள்வி

கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 ... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை; டிடிவி, ஓபிஎஸ்ஸை அரவணைக்கும் அமித்ஷா; எதிர்க்கும் EPS?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.எட... மேலும் பார்க்க

SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் இறந்தவர்கள் உட்பட 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவ... மேலும் பார்க்க

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க