செய்திகள் :

சென்னைப் புத்தகக் கண்காட்சி : ரமலோவ், மணிபல்லவம், ஆர்ட்டிகிள் - 29... மிஸ் பண்ணக்கூடாத 5 நூல்கள்!

post image
ரமலோவ்

ரமலோவ் - சரவணன் சந்திரன்

நாவல்

தனித்துவமான கதைக் களங்களோடு நாவல் உலகில் வலம் வருபவர் சரவணன் சந்திரன். இவரின் புதிய நாவல் ரமலோவ். இந்த நாவல் குறித்துப் பேசும் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன், "கடல், அதனோடு வாழ்பவர்களுக்கு இடையறாத கனவுகளின் பெருவெளி. கடல் தன் மக்களை அவர்களின் உள்ளுணர்வின் வழியே ஆள்கிறது. தொன்மங்களின் மூலம் வழி நடத்துகிறது. அதன் தீராத அற்புதங்களை இந்த நாவல் கவித்துவத்தின் உச்சத்தில் நின்று நிகழ்த்துகிறது. சரவணன் சந்திரனின் ‘ரமலோவ்’ மேஜிக் ரியலிச எழுத்து வகைமையின் ஓர் அசலான படைப்பாக்க முன்மாதிரி. மிக மிகச் சீரான, துல்லியமான எழுத்து நடையில் அதீதமான புனைவுகளின் எல்லையை எந்தக் குழப்பமும் இல்லாமல் தீண்டுவது பெரும் சவால். அந்த வகையில் சரவணன் சந்திரன் சாதித்திருக்கிறார்" என்கிறார்.

விலை ரூ 240

உயிர்மை பதிப்பகம்

ஸ்டால் எண் : f 46

மணிபல்லவம்

மணிபல்லவம் - வாசு முருகவேல்

நவீன தமிழ் இலக்கியத்தில் ஈழ எழுத்துகள் தனியிடம் வகிப்பவை, நீண்ட பங்களிப்பை ஆற்றியவை. அந்த வரிசையிலேயே வாசு முருகவேலின் புனைவுகளும் அமைந்துள்ளன. வாசு முருகவேலின் இந்நாவல் ஷோபாவின் மூலமாக நயினா தீவின் கதையைச் சொல்கிறது. தீவின் மனிதர்களுடன் உப்புக் காற்றும், சுடும் மணலும், மீன் வாசமும், கடுதாசிப் பூக்களும் கதையில் உயிர்த்துடிப்புடன் எழுந்துள்ளன. நிலமும் மனிதர்களும் ஞாபகங்களும் பிரிக்கமுடியாதவாறு இக்கதை பரப்பில் நிறைந்துள்ளன. வாசுமுருகவேல் தான் நம்பும் தரப்பினை தயக்கமின்றி நேரடியாக முன்வைத்திருக்கிறார். வாசு முருகவேலின் எழுத்தின் புதிய உச்சம் இது எனலாம்.

விலை ரூ. 150

நீலம் பதிப்பகம்

ஸ்டால் எண் : F 10

தமிழ்நாட்டு மரச்சிற்பங்கள்

தமிழ்நாட்டு மரச்சிற்பங்கள் - சா. பாலுசாமி

கலை வரலாற்றாய்வாளரான பேரா. சா. பாலுசாமி அவர்கள் பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலக் கலைகளில் மிகுந்த ஈடுபாடும், இந்தியக் கலைகள் குறித்த பரந்துபட்ட பார்வையும் உடையவர்.

அர்ச்சுனன் தபசு, ‘மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’ ‘சித்திரமாடம்: தமிழகச் சுவரோவியங்கள்,’ 'திருப்படைமருதூர் ஓவியங்கள்,' 'தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்' என்னும் பல்வேறு சரித்திர ஆய்வு நூல்களின் மூலம் தமிழ் ஆய்வுலகுக்கு வளம் சேர்த்த சா. பாலுசாமியின் புதிய நூல், 'தமிழ்நாட்டு மரச்சிற்பங்கள்.' இந்த நூல் தமிழக மரச்சிற்பக்கலையின் வளமையையும் சிறப்பையும் விளக்குகிறது. நூல் முழுவதும் புகைப்படங்கள் மிகவும் அழகாகத் தரப்பட்டு காண்பதற்கு பொக்கிஷமாக விளங்குகின்றன. 9/13 வடிவத்தில் ஹார்ட் பைண்டிங்கில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் கொடை எனலாம்.

விலை ரூ 3000

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

ஸ்டால் எண் : F 51

இசையும் இறைவனும்

இசையும் இறைவனும் - நாகூர் ரூமி

வானவில் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் இஸ்லாமிய வரலாற்றில் இசையின் பங்கு, நபிமொழிகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் இசை தொடர்பான பொதுவான கேள்விகளுக்கான பதில்களை ஆராய்வு செய்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் உள்ள சில விஷயங்கள் பொதுவெளியில் விரிவாக பேசப்பட்டதில்லை. எழுதப்பட்டதுமில்லை. சில நபிமொழிகளின் பின்னால் உள்ள வரலாற்று ரீதியான உண்மைகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக இசைகூடுமா, காலில் விழலாமா போன்ற கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லலாம். இவற்றின் பின்னால் உள்ள சொல்லப்படாத விஷயங்களைத் துணிச்சலாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கிறார் நாகூர் ரூமி.

விலை : ரூ 333

வானவில் புத்தகாலயம்

ஸ்டால் எண் : F 9

ஆர்ட்டிகிள் 29

ஆர்ட்டிகிள் - 29 - முகம்மது யூசுப்

தன் எழுத்தின் மூலம் புதிய தடம் பதித்துவரும் முகம்மது யூசுபின் புதிய நாவல், 'ஆர்ட்டிகிள் - 29.' சங்கரன்கோவில் பகுதியில் நேர்மையான இன்ஸ்பெக்டர் ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணையுடன் இந்த நாவல் தொடங்குகிறது. சாதியால் ஒடுக்கப்பட்ட குரல்கள், சட்டவிரோத குவாரிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான நிழல் சாம்ராஜ்ஜியம் ஆகியவை குறித்துப்பேசுவதோடு நாட்டார் தெய்வங்கள், சமணத் தொன்மம் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் போன்ற பல்வேறு கோணங்களில் விரிகிறது. எளிதாக ஒரே மூச்சில் வாசித்துவிடும் சுவாரஸ்யத் தன்மையோடு விளங்கும் இந்த நாவல் நிச்சயம் வாசகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

ஆசிரியர்: முஹம்மது யூசுப்.

விலை ரூ 320

யாவரும் பதிப்பகம்

ஸ்டால் எண் : F 42 & 43

சென்னை புத்தகக் காட்சி : நீங்க மிஸ் பண்ணக்கூடாத 5 புத்தகங்கள்!

மாபெரும் அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் கண்காட்சி நாளை (8.1.26) தொடங்க இருக்கிறது. ஜனவரி 21 ம் தேதிவரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 1,000 அ... மேலும் பார்க்க

வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு

தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ (ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்... மேலும் பார்க்க

தேனி: தொடங்கியது 4-வது புத்தக திருவிழா; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வழங்கிய எம்.பி!

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இன்று சி.எம் கையிலிருந்து விருது'- நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜ... மேலும் பார்க்க