ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
சென்னை புத்தகக் காட்சி : நீங்க மிஸ் பண்ணக்கூடாத 5 புத்தகங்கள்!
மாபெரும் அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் கண்காட்சி நாளை (8.1.26) தொடங்க இருக்கிறது. ஜனவரி 21 ம் தேதிவரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 1,000 அரங்குகள், முப்பதாயிரத்துக்கும் மேலான புத்தகங்கள் என பிரமாண்டமான இந்தக் கண்காட்சியில், வாசகர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த ஆண்டு வெளியாகும் முக்கிய நூல்கள், தவறவிடக்கூடாத பதிப்பகங்கள், அவசியம் வாங்க வேண்டிய புத்தகங்கள் என ஒரு வாசகனின் பார்வையில் தேர்ந்தெடுத்து முன்வைக்க இருக்கிறோம்.
புத்தகக் கண்காட்சி தொடங்கும் நாள் முதல் தினமும் பல்வேறு பதிப்பகங்களில் இருந்து தேர்ந்தெடுத்த 5 நூல்கள் குறித்த அறிமுகத்தை உங்கள் முன் வைக்க இருக்கிறோம். இந்த ஆண்டு விகடன் பிரசுரத்தில் இருந்து பல்வேறு புதிய நூல்கள் வெளியாகின்றன. அவற்றில் 5 நூல்கள் குறித்த தகவல்கள் இதோ உங்களுக்காக. விகடன் பிரசுரத்தின் அரங்கு எண் F2 மற்றும் F 25. வாருங்கள், அறிவுத் திருவிழாவில் கலந்துகொண்டு வாசிப்பை மேம்படுத்துவோம்.

சம்படி ஆட்டம் - மாரி செல்வராஜ்
இன்றைக்கு தமிழ் சினிமாவில் தனித்த படைப்பாளராய் கொண்டாடப்படும் இயக்குநர் மாரிசெல்வராஜ். தெக்க புளியங்குளத்திலிருந்து வெக்கைப்படிந்த அந்த புழுதிக்காலோடு அத்தனை வறுமையிலும் வாழ்வின் தீரா நம்பிக்கையோடு வாழும் மனிதர்களை, அவர்களின் நம்பிக்கையாய் திகழும் உச்சினியை, ஆடுகளை நண்பனாக்கி கொள்ளும் சாமனியனை எந்த ஒளிவுமறைவுமில்லாமல் தன் படைப்புக்குள் உலவ விட்டு இருளுக்குள் தன்னை நிறுத்தி அந்த வெளிச்சத்தின் சத்தம் கேட்டு கேட்டு சம்படி ஆட்டம் ஆடுகிறார். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்ற கட்டுரைகள் தற்போது நூலாகவும் வெளிவருகிறது.
பக்கங்கள் : 240
விலை : ரூ.270
சங்காரம் - இரா சரவணன்
ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா.சரவணன் எழுதி வெளியான பரபர நாவல். வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் பந்திவைத்திருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும்.
"இந்த உலகில், எல்லோருக்கும் வாழ வாய்ப்பிருக்கிறது. ஒருவனைக் கொன்று, ஒருவன் வாழவேண்டிய இக்கட்டு உண்மையில் இல்லை. ஆனாலும், ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க கொலைச் செய்திகள்… காதல், சாதி, அரசியல், நிலம் எனக் காரணங்கள் மாறுகின்றனவே தவிர, கொலைகள் குறையவே இல்லை. சல்லி வேர்களைப்போல தமிழகம் முழுக்க வெட்டுகிற ஆட்கள் விரவிக்கிடக்கிறார்கள். துளி ரத்தம் பார்த்தாலும் மயங்கி விழுகிற நான், அரிவாளும் கத்தியுமாய் அலைகிற இந்தக் கூட்டத்தைப் பற்றி ஆராய்ந்து ‘சங்காரம்’ எழுதக் காரணம், பிறர் உயிர்மீதான பேரக்கறைதான்" என்று இந்தக் கதை குறித்துப் பேசும் சரவணனின் வாக்குமூலம் எத்தனை உண்மை என்பதை இந்த நூலை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணரமுடியும். விறுவிறுப்பான வாசிப்பை விரும்புபவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய நூல் இது.
பக்கங்கள் 280
விலை: ரூ.550

3. அல்கெமி செய்யும் அற்புதம் - குரு மித்ரேஷிவா
அல்கெமி - மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்வியல். இது புரிந்துகொள்ளப்பட வேண்டுயது அல்ல. வாழ்ந்துணர வேண்டியது. குரு மித்ரேஷிவா அல்கெமி என்னும் இந்த அற்புத வாழ்வியலை போதித்துவருபவர். இது குறித்து இன்னும் அறியாதவர்களுக்கு வழிகாட்டுகிறது இந்த நூல். அல்கெமி என்றால் என்ன? அதைப் பின்பற்றினால் மனதிலும் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோதே பலரின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
பக்கங்கள் 216 - விலை 235

முசோலினி - பாலு சத்யா
சாதாரண கொல்லரின் மகனாகப் பிறந்து, இத்தாலியின் பிரதமராகி, சர்வாதிகாரியாக உருப்பெற்று, அண்டை நாடுகளையெல்லாம் கிடுகிடுக்கவைத்த முசோலினியின் கதை நம்ப முடியாதது, விசித்திரமானது. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், முசோலினி குறித்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தருகிறது.
பக்கங்கள்: 288
விலை: 590


ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ் - வெ. நீலகண்டன்
வாழ்நாள் முழுவதும் உழைத்துக் களைத்து ஓய்ந்துபோய்விடுவதில்லை இன்றைய தலைமுறை. வாழ்வை மாற்றும் பல புதிய சிந்தனைகளோடு வலம் வருபவர்கள் அவர்கள். தொடர் உழைப்பின் மூலம் மிக விரைவில் அநாயாசமாக ஜெயித்துக்காட்டுகிறவர்கள். அப்படி அற்புதமான ஒரு ஐடியாவோடு களம் இறங்கி வாழ்வில் பெரு வெற்றிபெற்ற இளைஞர்களின் கதைதான், 'ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்.' இந்த நூலில் 26 இளைஞர்களின் சாதனை வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. தங்களின் புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், சமூகத்தில் எதிர்கொண்ட சிக்கலகள், மனத்தடைகள் ஆகியவற்றையும் இந்த நூலில் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். போராட்டங்களைத் தாண்டி சாதித்த அவர்களின் வாழ்க்கைப் பாடமே, 'ஸ்டார்ட் அப் ஸ்டார்.' ஆனந்த விகடனில் வெளியானபோது அமோக வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் தற்போது நூலாக வெளிவந்திருக்கிறது. முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் வெற்றிக்கான ஒரு கையேடு.
பக்கங்கள் 160
விலை: 250
விகடன் புத்தகங்களை வாங்க... https://books.vikatan.com/





















