ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.
தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அதிக அளவு நிலம் வாங்கி இருக்கிறார். இது தவிர குஜராத் மற்றும் மும்பையில் வர்த்தக கட்டடங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஆயிரம் சதுர மீட்டர், அதாவது 5.6 ஏக்கர் நிலம் வாங்கி போட்டு இருந்தார். அந்த நிலம் சமர்மதி ஆற்றங்கரையோரம் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தில் அமிதாப்பச்சன் முதலீடு செய்திருந்தார்.

இப்போது அந்த நிலத்தில் குடியிருப்பு நகரம் ஒன்றை உருவாக்க அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார். இதற்காக ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்துடன் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தத்தில் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சன் ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளார். இந்த இடத்தில் 10 லட்சம் சதுர அடியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், வணிக வளாகம், அலுவலக வளாகம் என அனைத்து வசதிகளுடன் இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருக்கிறது. சபர்மதி ஆற்றங்ரையோரம் இருக்கும் கிஃப்ட் சிட்டி வளாகத்தில் இது கட்டப்பட இருக்கிறது.
ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம் முதல் முறையாக கிஃப்ட் சிட்டியில் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த கட்டுமான நிறுவனம், மும்பையின் ஜூகு, பாந்த்ரா, பிரபாதேவி, வெர்சோவா, நீபியன் சீ ரோடு மற்றும் அந்தேரி போன்ற முக்கியப் பகுதிகளில், அதிநவீன ஆடம்பர குடியிருப்பு மற்றும் உயர்தர வணிக வளாகத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. அமிதாப்பச்சனும், ஸ்ரீலோடஸ் நிறுவனமும் லாபத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.




















