'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' - திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வ...
"பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும்" - திருமாவளவன் எச்சரிக்கை
எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன்.
எரிவாயு தட்டுப்பாட்டால் வீடுகள் மட்டுமன்றி, உணவகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மின்சார அடுப்புகளை நோக்கிச் செல்லும் சூழலில், மின் கட்டணச் சுமையும் அதிகரிக்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில், மின்சார யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விசிக வரவேற்றுப் பாராட்டுகிறது.
ஈரான் அதிபர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது ஈரான் மீது நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்கோ கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் அதைக் கண்டிப்பது விந்தையாக இருக்கிறது.

பிரதமரின் இத்தகைய வெளியுறவுக் கொள்கை தேசப் பாதுகாப்புக்கும் மக்கள் நலனுக்கும் உகந்தது அல்ல. உலகப்போர் மூளாத வண்ணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க விசிக வலியுறுத்தும்.
தமிழகத்தில் மட்டும்தான் இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுவது, அவருக்கு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது.
இது தேர்தலுக்கான போராட்டம் அல்ல. உலக அமைதிக்காகவும், அதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு போன்ற மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் நடத்தப்படும் போராட்டம்.

தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிகள் இன்னும் அமையக் கூட இல்லை. பா.ஜ.க தனது கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க நயவஞ்சகமான உத்திகளைக் கையாள்கிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அவர் அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அவர் அதற்கு இணங்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இடதுசாரிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது போன்ற முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பானதுதான். இதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; இறுதியில் சுமுகமான தீர்வு எட்டப்படும். எங்களின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும்" என்றார்,















