நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான ...
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்; பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள் வீடு திரும்பாததால், காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மறுநாள் (11-ம் தேதி) காட்டுப்பகுதியின் அடர்ந்த முட்புதருக்குள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து இத்தகவல் காட்டுத்தீயாய் பரவ ஊர் மக்கள் வேடநத்தம் – குறுக்குச்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ”குற்றவாளிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என, அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் உறுதியளிக்க சாலைமறியலைக் கைவிட்டனர்.
ஆனால், வேடநத்தம் கிராமத்திற்குள் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, அம்மாணவியின் வீட்டிற்கு ஆறுதல் கூறச் சென்றார்.
அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள், ”நேற்று ஏன் வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வருகிறீர்கள்” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள்.
பின்னர், ஊர்த்தலைவர்கள் கனிமொழியைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க வைத்தனர். நடந்தது குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

அத்துடன், “மாணவியின் சகோதரி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்பினை நிறைவு செய்த பின் அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்” எனக் கூறினார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் மாணவியின் வீட்டிற்கு வந்தார். அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் என, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போலீஸாரிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
மாணவி உடல் கண்டெடுக்கப்பட்ட அன்றே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 14 பேர் விசாரணை செய்யப்பட்ட நிலையில், வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வேடநத்தம் தவிர மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு குளத்தூர், விளாத்திகுளம், ஆறுமுகநேரி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் சி.சி.டி.வி கேமரா இல்லாததாலும், பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாலும் சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.





















