Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய...
பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவரது மகன் செல்வம் (வயது:13). இவர், கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி (வயது: 15). இவர், நடுவலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது, பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது. இதில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துள்ளனர்.

சற்று நேரத்தில் செல்வம் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்ற செல்வத்திற்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பெற்றோர்கள் செல்வத்தை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த புலிவலம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வம் இறந்ததற்கான காரணம் என்ன, ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாரதி அடித்ததால் தான் இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், அபபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



















