ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிள...
கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' - சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறது அக்கிராமம்.
இந்தத் தண்ணீர் பிரச்னை மணிவாசகத்தின் காதலுக்கும் தடை போடுகிறது. பிறகு, தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு கிணறு வெட்டத் திட்டமிடுகிறார்கள் ஊர் மக்கள். அப்படி கிணற்றுக்காக குழி தோண்டுகையில் பல பிரச்னைகளும் கிளம்புகின்றன.
இப்பிரச்னைகளை மணிவாசகமும், ஊர் மக்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியிருக்கும் 'கெணத்த காணோம்' படத்தின் கதை.

வழக்கமான முகங்களைத் தவிர்த்து, காதல், குடும்ப பாசம், ஊர் மீதான அக்கறை எனப் பொறுப்பாக கதாபாத்திரத்தைக் கரைசேர்த்திருக்கிறார் யோகி பாபு. ஊர் மக்களிடமிருந்து இவரை அந்நியமாகத் தெரிய வைக்கும் வட்டார வழக்கைப் பேசுவது சற்றே நெருடல்!
லவ்லின் சந்திரசேகருக்கு நடிப்பில் பெரிய வேலைகள் கொடுக்கப்படவில்லை. தியாகியாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.
இவர்களைத் தாண்டி, ஊர் மக்களாக வரும் ஹலோ கந்தசாமி, ஊர்த்தலைவர் ஆகியோர் ஆங்காங்கே படத்திற்கு லேசாக 'கலகல' நிறம் பூசியிருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சித் துறை அதிகாரிகளாக வரும் ரேச்சல் ரெபாக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அழுத்தமில்லாத காட்சிகள் இல்லாததால் வெறுமனே திரைநேரத்தை மட்டும் ஆக்கிரமித்துப் போகிறார்கள்.
வறண்ட நிலங்கள் தரும் வெக்கையையும், கிராமத்து மண் வீடுகளின் எதார்த்தத்தையும் ஒளியமைப்பில் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன். படம் தொடங்கிய நொடியே துளியும் நிதானம் கொடுக்காமல் வேகமாக விரட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.

அதனால், முதல் அரை மணி நேரத்திற்குப் பிறகு ஊர்ந்துப் போகும் காட்சிகளைச் சாணை பிடிக்காமலும் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் பாடல்கள் எவையும் செவிகளுக்குச் சுவை கூட்டவில்லை. கிணற்றுக்குள் விழுந்தது போல் தப்பிக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளுக்குக் கரம் கொடுக்காமல் போயிருக்கிறது பின்னணி இசை.
அரசு இயந்திரங்கள் எப்படி மக்களுக்குப் பிரச்னைகளை விளைவிக்கிறது, அவர்கள் மீது எப்படியான வழிகளில் அதிகாரப் பலத்தைக் காட்டுகிறது என்பதை கிராமப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா. கிராமத்து வாழ்வியலில் புழங்கும் வார்த்தைகள், கிராமத்து மனிதர்களாக வரும் வகைவகையான கதாபாத்திரங்கள் என்பதில் மட்டும் 'சுறுசுறு'ப்புடன் தெம்பாக முன்னிற்கிறது இப்படம்.

சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும், அதையொட்டிய காமெடி காட்சித்தொகுப்புகளும் ரசிக்க வைக்கின்றன. ஆனால், காமெடி என்பதை மட்டுமே வைத்து முதல் பாதியின் தொடக்கத்திலிருந்து இடைவேளை நேரம் வரை தோண்ட முயற்சித்திருக்கிறார்கள். சூழலுக்குப் பொருந்தாத காமெடி, வழக்கொழிப் போன கிராமத்து காமெடி, உருவக்கேலி ஆகியற்றை பின்பற்றி இந்தச் சினிமா நம்மையும் கிணற்றுக்குள் தள்ளிவிடுகிறது. அதனால், கதையை நகர்த்துவதில் கோட்டை விட்டிருக்கிறது திரைக்கதை.
முதல் பாதியில் ஒரு கதை, இரண்டாம் பாதியில் வேறு கதைகள் என மாறிக்கொண்டே இருக்கும் கதைகளும், மோதல் புள்ளிகளும் பாறைகளாய் திரைக்கதை மீது விழுகின்றன. இதனால், திரைக்கதையின் எமோஷனல் வீரியம் வலுவிழக்கிறது.
'ஆராய்ச்சி என்பது மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, அது மக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது' என்பதையும், அரசு இயந்திரங்களின் அதிகார முகத்தையும் காட்சிப்படுத்தியதெல்லாம் ஓகே! ஆனால், அதனை கருத்து பேசும் பழைய சினிமா டெம்ப்ளட் குழிக்குள் மூடி புதைத்திருக்கிறார்கள்.

மாறிக்கொண்டே இருக்கும் மையக்கதைகள், சோபிக்காத காமெடிகள் ஆகியவற்றால் படத்தின் சுவாரஸ்யக் கிணற்றை வற்றவிட்டிருக்கிறது இந்தக் 'கெணத்த காணோம்'.
















