செய்திகள் :

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

post image
நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, மணிகண்டனுடன் ஊரை விட்டு வெளியேறுகிறார் செண்பா. அதன் பின்னர் நிகழும் ஒரு துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் கொரியாவின் சியோல் (Seoul) நகரத்துக்கே பயணப்படும் செண்பா, அங்கே என்னவெல்லாம் செய்தார் என்பதே நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த 'மேட் இன் கொரியா' (Made in Korea).
Made in Korea Review

படம் முழுவதையும் தாங்கிப்பிடிக்கும் வேடத்தில் பிரியங்கா மோகன், காமெடி காட்சிகளை அப்பாவி முகத்துடன் கரை சேர்த்தாலும், எமோஷன் காட்சிகளையும் அதே மோடில் அணுகியிருப்பது ஏமாற்றமே! அந்தக் கதாபாத்திரம் நிஜமாகவே அழுகிறதா, அதுவும் நடிப்புக்குள் நடிப்பா என்பது போன்ற கேள்விகளும் எட்டிப் பார்க்கின்றன. அப்பாவாக திருநாவுக்கரசு, காதலனாக ரிஷிகாந்த், ஆங்காங்கே தலைகாட்டும் ஜென்சன் திவாகர் உள்ளிட்டவர்கள் தேவையான பங்களிப்பை நல்கியிருக்கின்றனர். கொரிய நடிகர்களில் பாட்டியாக அலப்பறை கொடுக்கும் 'ஸ்குவிட் கேம்' புகழ் பார்க் ஹை-ஜின் (Park Hye-jin), செண்பாவின் பயணத்தில் உடன் நிற்கும் vlogger-ஆக வரும் சி-ஹுன் பேக் (Si-hun Baek) ஆகியோர் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியுள்ளனர்.

நீலகிரியின் லவ்டேலின் பசுமையையும், தென் கொரியாவின் சியோல் நகரின் வெளிச்சமிகு இரவுகளையும் குறைவில்லாமல் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு. இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் படத்தை முடிந்தளவு வேகப்படுத்தியிருக்கிறது ஆண்டனியின் படத்தொகுப்பு. ஹிசம் அப்துல் வஹாப், சைமன் கே. கிங், தரண் குமார் என மூன்று இசையமைப்பாளர்கள். ஆனால், பாடல்கள் கவனம் ஈர்க்க மறுக்கின்றன. பின்னணி இசையில் தரண் குமாரின் பங்களிப்பு எமோஷன் காட்சிகளுக்கு உதவியிருக்கிறது.

Made in Korea Review

இந்தியாவில் இளைஞர்களிடையே பரவிவரும் கொரிய மோகம், அதன் இசை, படங்கள் மற்றும் தொடர்களைக் கொண்டாடும் கலாசார நகர்வு என்பதனை அடிப்படையாக வைத்து ஒரு ஃபீல் குட் டிராமாவைத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். வழக்கமான காதல் எதிர்ப்பு, வீட்டை விட்டு வெளியேறுவது என்பதாகத் தொடங்கும் படம், சென்னை விமானநிலையத்தில் எடுக்கும் ட்விஸ்ட் எதிர்பாராதது. ஆனால், அதன் பின்னர் நாயகி எடுக்கும் முடிவுகளில் மருந்துக்கும் லாஜிக் இல்லாதது ஏனோ?!

கொரியாவில் கஷ்டப்படும் தமிழ்ப் பெண் என்ற ஒன்லைனை விரிக்க, லாஜிக்கற்ற காட்சிகளையும், ஆழமற்ற எமோஷனல் வசனங்களையுமே துணைக்கு அழைக்கிறது திரைக்கதை. திக்குத் தெரியாத நாட்டில் நாயகியின் கையறு நிலையைப் பிரதானப்படுத்தாமல் அங்கும் அவரின் பழைய பிரச்னைகளையே முன்னிறுத்துகிறது படம். நாயகிக்கு வேலை கிடைப்பது, அங்கு வசிக்கும் பாட்டியின் ரகசியத் திட்டம் போன்றவையும் 'சிறுவர்கள் விளையாட்டு' பாணியிலேயே நகர்கின்றன.

Made in Korea Review

கொரியாவுக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பு, ஹோட்டல் வைத்திருக்கும் அப்பாவின் ஸ்பெஷாலிட்டியான பூண்டு சாதத்தை செண்பா, கொரிய கிம்சி ரைஸுடன் கலப்பது, பாட்டிக்கும் செண்பாவுக்கும் இடையே உருவாகும் அந்த நட்பு, எங்குச் சென்றாலும் உதவிடும் மனிதர்கள் என ஒரு சில இடங்கள் மட்டுமே அந்த 'ஃபீல் குட்' உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. கொரிய கலாசாரத்தை செண்பா விரும்புவதற்கான காரணம் ஆழமாக இருந்தாலும், கே-பாப் இசை, தொடர்கள் போன்றவற்றில் அவருக்கு இருக்கும் காதல் குறித்த விவரணைகள், வெளிப்பாடுகள் எங்குத் தேடியும் காணவில்லை. ஹோட்டல் தொடங்கும் ஐடியா ஓகே என்றாலும், அடுத்து இசைக்குழு, பணத்தேவை என நீளும் க்ளைமாக்ஸ் டிராமா, 'எதுக்கு இதெல்லாம்?' என்றே கேட்க வைக்கின்றன.

Made in Korea Review
ஒன்லைனாக சமகாலக் கலாசார பிரதிபலிப்பை முன்னிறுத்தும் இயக்குநர், அதை ஆழப்படுத்தத் தமிழ் சினிமாவின் பழக்கப்பட்ட டெம்ப்ளேட்களையே கையில் எடுத்திருப்பதால் பெயரளவில் மட்டுமே `Made in Korea'-வாக இருக்கிறது படம்!

கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' - சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் ... மேலும் பார்க்க

Youth: `சந்தோஷமாக இருக்கு கென், ஆனா அதைவிட அம்மாவுக்கு ரொம்ப பயமா இருக்கு!'- கலங்கிய கிரேஸ் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கிரேஸ் கருணாஸ், "என் பையனுக்கு 'அசுரன்' ப... மேலும் பார்க்க

கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் ச... மேலும் பார்க்க

Youth: "நான் 'அசுரன்' படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!"- கென்னை கலாய்த்த தனுஷ்

'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்த... மேலும் பார்க்க

பேரும் புகழும் காதலியும் தந்த ஜப்பானில் செட்டில் ஆகிட்டேன்!- 'போடா போடா புண்ணாக்கு' பாடிய‌ நீலகண்டன்

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ஒரு படம் 'என் ராசாவின் மனசிலே'. ராஜ்கிரண் தயாரித்து நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்தார் மீனா. படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா. நடிகர் வடிவேலுவின்... மேலும் பார்க்க

என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந... மேலும் பார்க்க