Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆ...
கோவை: "திமுக ஆட்சியின் அவலநிலை" - பெண் காவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை; காவல்துறை உயர் அதிகாரி கைது
கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண் ஊழியர்கள் பலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அநாகரீகமாகப் பேசி வந்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸார் செந்தில்குமார் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் போலீஸார், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரித்தனர். அதில் செந்தில்குமார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து பாலியல் வன்கொடுமை, மிரட்டல், தாக்குதல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் செந்தில்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் செந்தில்குமாரை நேற்று இரவு கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெண் காவலரே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதும், காவல்துறை அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை" என்று கூறியுள்ளார்.




















