ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
அவர்களது வீடு வனப்பகுதி அருகில் இருக்கிறது. இரவில் சிறார்கள் இருவரும் 8.30 மணிக்குத் தங்களது வீட்டிலிருந்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் அப்படிச் சென்றபோது திடீரென அங்கு சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்தச் சிறுத்தைப்புலி ஸ்வர்வாஞ்சலியின் கழுத்தைக் கடித்து இழுத்துச்செல்ல முயன்றது.
உடனே சுதாரித்துக்கொண்ட சிவம், தனது சகோதரி ஸ்வர்வாஞ்சலியின் கையைப் பிடித்து இழுத்தார். இதில் ஸ்வர்வாஞ்சலியின் கை வழுக்கிக்கொண்டது. சிவம் பிடியிலிருந்து கை நழுவியது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு சிவம் தனது சகோதரியின் காலைப் பிடித்துக்கொண்டு கத்தினார்.

அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிவத்தின் தாயார் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்கு வந்தனர்.
அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிறுத்தைப்புலி பயத்தில் சிறுமியை விட்டுவிட்டு காட்டுக்குள் இருட்டில் தப்பிச் சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக சிறுமி குளிருக்காக சுவெட்டர் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார். இதனால் சிறுத்தைப்புலியின் பல் சிறுமியின் கழுத்தில் ஆழமாகப் பதியவில்லை. ஆனாலும் கழுத்து, கை, முதுகு பகுதியில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டது.
அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவம் துணிச்சலுடன் செயல்பட்டு இருக்காவிடில் சிறுமியை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்று இருக்கும்.
அதோடு சிறுமி அணிந்திருந்த சுவெட்டர் மற்றும் தொப்பியும் சிறுமிக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தது. சிறுமியைக் காப்பாற்றிய சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் 11 மாத குழந்தையை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்றுவிட்டது.




















