49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான கவுதம் என்பவரிடம் கூறியுள்ளாராம். இதனையடுத்து கவுதம், இருவரையும் சமாதானப்படுத்துவதுபோல் நடித்து ராம்குமாரை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். உடன் செல்வ மணிகண்டனும், 17 வயது சிறுவனும் சென்றுள்ளனர். குற்றாலம் பராசக்தி நகரில் அவர்கள் 4 பேரும் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது டேபிள், சேர் வாடகைக்கு தராதது குறித்துக் கேட்டு ராம்குமாரிடம் செல்வ மணிகண்டன் தகராறு செய்துள்ளார்.
அப்போது செல்வ மணிகண்டன், கவுதம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் ராம்குமாரை சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலைசெய்துள்ளனர். இதற்கிடையில், ராம்குமாரை கவுதம் பைக்கில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரின் மனைவி உஷா ராணி மற்றும் உறவினர்கள்... அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ராம்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், அவர் குற்றாலத்தில் உள்ள வீடு போன்ற விடுதியில் இருப்பது தெரியவந்ததும், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் சோதனையிட்டதில், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு அறையில் கவுதம், செல்வ மணிகண்டன் மற்றும், 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரிடம் விசாரணை செய்ததில் ராம்குமாரைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டனர். டேபிள், சேர் வாடகைக்குத் தராததால் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



















