செய்திகள் :

இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

post image

ட்ரம்ப் அரசு ரெஸ்ட்டே எடுக்காது போலும். அது தனது அதிரடிக்கு தயாராகிவிட்டது.

நேற்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துள்ளார். இது அமெரிக்காவின் அடுத்த பூகம்பத்திற்கான பிள்ளையார் சுழியாக இருக்கலாம்.

லிண்ட்சேவும், ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் புளூமெந்தலும், ரஷ்யாவிற்கு எதிரான மசோதா ஒன்றை தயார் செய்துவந்தனர். அந்த மசோதா தற்போது தயாராகி விட்டது.

ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன் போர்

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீதான போரை தொடங்கியது ரஷ்யா.

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வது... பண உதவி செய்வது என உக்ரைன் பக்கம் நின்றது அமெரிக்காவின் அப்போதைய ஜோ பைடன் அரசு. இதுபோக, வரிகளை அதிகரிப்பது... தடை விதிப்பது என ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடியையும் தந்து பார்த்தது அமெரிக்க அரசு. அமெரிக்கா உடன் சேர்ந்து ஐரோப்ப நாடுகளும் வரி... தடைகளை விதித்தது.

ஆனால், இவை எதற்குமே ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை.

ட்ரம்ப் என்ட்ரி

2024-ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே, ட்ரம்ப் 'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்' என்று உறுதியாக கூறி வந்தார். மேலும், அவர் எளிதாக இந்தப் போர் நிறுத்தத்தைச் சாதித்துவிடலாம் என்றும் நினைத்தார்.

இந்த உறுதிக்கு பின்னால் இருந்த காரணம், அவருக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இருந்த வலுவான நட்பு.

ஆனால், அவர் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக நடந்தது என்னவோ வேறு.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று வரும் 20-ம் தேதியோடு ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால், இன்னமும் இந்தப் போர் நிறுத்தத்தில் தள்ளாடி வருகிறார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்தினேன்... தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்தினேன்... இப்படி எத்தனை போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறினாலும், அவர் ஆரம்பத்தில் 'நிறுத்துவேன்' என்று கூறிய போர் இன்னும் முடியவில்லை. இது ட்ரம்பிற்கு ஒருவித அதிருப்தி தான்.

முயற்சிகள்

இந்தப் போரை நிறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அழைத்துப் பேசினார் ட்ரம்ப். அமெரிக்காவில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நடந்தது. புதினும், ஜெலன்ஸ்கியும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் செய்தார். ஆனால், அத்தனைக்கும் பலன் 'ஜீரோ'.

இதையடுத்து, வரி அஸ்திரத்தை ட்ரம்ப் கையில் எடுத்தார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அவர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 25 சதவிகித வரி போக, கூடுதலாக 25 சதவிகித வரி விதித்தார்.

இது ஓரளவு ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தத்தான் செய்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

காரணம், இப்போது இந்தியா படிப்படியாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது.

 ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்
ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்

அடுத்ததாக, ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது அமெரிக்கா.

இவை அனைத்துமே ரஷ்யாவிற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியது.

மசோதா

அதன் படிதான், தற்போது லிண்ட்சே மற்றும் ரிச்சர்ட்டின் மசோதா ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது.

அந்த மசோதாவின் படி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிசக்தி போன்ற ஆற்றல்களை இறக்குமதி செய்தால், அந்த நாடுகளின் மீது 500 சதவிகித வரி விதிக்கப்படும்.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாயம் டாப் இடங்களைப் பிடித்துவிடும். ஆக, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுக்கும் 500 சதவிகித வரி விதிக்கப்படும்.

இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி, குடியுரசுக் கட்சி இரண்டு கட்சிகளுமே பெருமளவு வாக்களிக்கும் என்று லிண்ட்சே எதிர்பார்க்கிறார். இந்த மசோதாவிற்கு ட்ரம்பின் ஆதரவும் உள்ளது என்று நேற்றைய ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு லிண்ட்சே தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

இந்தியா - வரி

இந்தியாவை இந்த வரி என்ன செய்யும் என்கிற கேள்விக்கு, ``அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது எவ்வளவு வரியை ஏற்றினாலும் இனி இந்திய ஏற்றுமதியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், இப்போதே அவர்கள் மிக அதிக வரியைத் தான் சந்தித்து வருகிறார்கள்.

இதனால், தங்களது ஏற்றுமதிகளை வேறு நாட்டின் பக்கம் திருப்பத் தொடங்கிவிட்டனர் இந்திய ஏற்றுமதியாளர்கள்" என்று பதில் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்தியா, சீனப் பொருள்களின் விலை ஏற்றுவது அமெரிக்காவிற்கும் நஷ்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் என்று கூறுகின்றனர்.

வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற அமெரிக்க மாகாணங்களில் இந்திய பொருள்களின் நுகர்வோர்கள் மிக அதிகம். இப்போது இந்திய பொருள்களின் மீதுள்ள 50 சதவிகித வரியே, அவர்களுக்கு விலைவாசியைக் கூட்டியுள்ளது.

500 சதவிகிதம் என்று சொன்னால், நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

சீனா

சீனாவின் பக்கம் வந்தால், அமெரிக்கா மூலப்பொருள்களை பெரும்பாலும் உற்பத்தி செய்யாது. அவற்றுக்காகப் பிற நாடுகளையே அமெரிக்கா சார்ந்திருக்கும்.

குறிப்பாக, மூலப்பொருள்களுக்கு சீனாவை பெருமளவு நம்பியிருக்கிறது அமெரிக்கா.

சீனா மீது வரி விதித்தால், இந்தியா போன்று அமைதியாக இருக்காது சீனா. அதுவும் அமெரிக்காவிற்கு பரஸ்பர வரியை விதிக்கும். இது அமெரிக்காவிற்கு பெருமளவு சுமையை ஏற்படுத்தும். அங்குள்ள பல தொழில்கள் பாதிக்கப்படும்.

அடுத்ததாக, அமெரிக்காவின் இந்தச் செயல் உலக அளவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்... உலகப் பொருளாதாரங்களும் பாதிக்கப்படும்.

Russia - Ukraine - புதின்
Russia - Ukraine - புதின்

ரஷ்யா வழிக்கு வருமா?

இதெல்லாம் ஓகே... இவை ரஷ்யாவை வழிக்குக் கொண்டு வந்துவிடுமா என்று பார்த்தால், இப்போதைய நிலவரப்படி, 'நோ'.

ரஷ்யாவிற்கு இதுவரை எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும், அது முன் வைத்த காலை பின் வைக்கத் தயாராக இல்லை. இனி அதை புதின் செய்யமாட்டார் என்று தான் தோன்றுகிறது.

அவரைப் பொறுத்தவரை உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது... உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவிற்கு தந்துவிட வேண்டும்.

இது நடந்துவிட்டால் போரை நிறுத்திவிடுவார்.

அதனால், அமெரிக்கா போடும் வரி, அதற்கு பிற நாடுகளுடன் இருக்கும் உறவைத் தான் கெடுக்குமே தவிர, வேறு ஒரு பலனையும் சேர்க்காது.

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க