Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்க...
தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சாந்தி கடந்த 09.09.2021 முதல் 10.11.2021 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக சண்முகசுந்தரம் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதேபோல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்லத்தம்பி என்பவரிடம் ரூ. 4 லட்சம், பவித்ராவிடம் ரூ. 4 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ. 12 லட்சம் மற்றும் முத்துப்பாண்டியிடம் ரூ. 4 லட்சம் வாங்கி மொத்தம் 74 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி வசூலித்துள்ளனர்.

பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாந்தி, உடனே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஒ-வாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















