Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?
Doctor Vikatan: நகம் கடிக்கும் பழக்கத்தால் வயிற்றில் பூச்சிகள் உருவாகுமா?!
Doctor Vikatan: என் குழந்தைக்கு நகம் கடிக்கிற பழக்கம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. நகம் கடிக்கும் பழக்கம் காரணமாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. நகம் கடிப்பதால் வயிற்றில் பூச்சிகள் வரும் என்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி
நகம் என்பது நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் (Debris) சேமிக்கப்படும் இடமாகும். பள்ளிக்காலத்திலிருந்தே நமக்குக் கற்றுக்கொடுக்கப்படும் அடிப்படை ஒழுக்கங்களில் ஒன்று, நகங்களை முறையாக வெட்ட வேண்டும் என்பது. இன்றும்கூட பல பள்ளிகளில், மாணவர்கள் நகம் வெட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.
நகம் கடிப்பது ஏன் ஆபத்தானது என்பதை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்கள் பலருக்கும்கூட இந்தப் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். நகங்களில் பெரும்பாலும் கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் (Fungus) தங்கியிருக்கும். நகம் கடிக்கும்போது, அதில் உள்ள கிருமிகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று சிறுகுடலை அடைகின்றன. இது வயிற்றில் பல்வேறு உபாதைகளை உருவாக்கக்கூடும்.
சிலர் நகங்களைக் கடித்து துப்பாமல், அவற்றை விழுங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். அப்படி விழுங்கும் நகங்கள் வயிற்றுக்குள் செல்லும்போது, அவை குடல் பகுதியில் தங்கி அப்பெண்டிக்ஸ் (Appendix) பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நகம் கடிப்பதால், வயிற்றில் புழுக்கள் வருமா என்றால், நேரடியாக புழுக்களாக உருவாகாது. ஆனால், புழுக்களின் முட்டைகள் நகங்களில் இருக்கக்கூடும். ஏற்கெனவே வயிற்றில் புழுத்தொல்லை உள்ளவர்களுக்கு, அந்தப் புழுக்கள் நம் ஆசனவாய் வழியே முட்டைகளை வெளியேற்றும். அந்த முட்டைகள் நகங்களில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. மீண்டும் நகம் கடிக்கும்போது அவை உடலுக்குள் சென்று இனப்பெருக்கம் செய்து, பின்வார்ம்ஸ் (Pinworms), அஸ்காரிஸ் (Ascaris) போன்ற மோசமான புழுத்தொல்லைகளை உருவாக்கும். இது குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மீண்டும் மீண்டும் உங்கள் குழந்தைக்கு நகம் கடித்தலின் விளைவுகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி மாற்றப் பாருங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு முறையாவது குழந்தையின் நகங்களை முறையாக வெட்டிவிடுங்கள். உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை வலியுறுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















