ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
தென்காசி: 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணையில் இயங்கிய வெடிமருந்து குடோன்; சிறுவனால் சிக்கியது எப்படி?
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, அச்சிறுவனின் வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், சிறுவன் வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில், வெடிமருந்து இருந்துள்ளது.
இதுகுறித்து அச்சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேர்ந்தமரம் அருகிலுள்ள ஒரு கோழிப்பண்ணை வெடிமருந்து குடோன் செயல்படுவதாகக் கூறியுள்ளான்.

தொடர்ந்து பொய்கையிலிருந்து கரடிகுளம் செல்லும் சாலையில் இடைகாலைச் சேர்ந்த ஒரு நபருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் சோதனை நடத்தியுள்ளனர். அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தனிப்பிரிவு போலீஸார், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு வெடிமருந்துகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் 3 ஆண்டுகளாக அனுமதியில்லாமல் கோழிப்பண்ணையில் வெடிமருந்து பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும், சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததும் தெரியவந்தன.
இதனையடுத்து போலீஸார், கோழிப்பண்ணைக்குச் சீல் வைத்தனர். அத்துடன் வெடிமருந்து குடோன் நடத்தி வந்தவரைத் தேடி வருகின்றனர்.

ஒதுக்குப்புறமாக உள்ள இது போன்ற பண்ணைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை நடத்த வேண்டும், தனிப்பிரிவு போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதே போல இப்பகுதிகளில் இரவு நேரங்களில் முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவங்களிலும், தெருவிளக்கு எரியாத சாலைகளில் வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















