49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி
கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகே நேற்று இரவு நேரம் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றது.

இதனால் மக்கள் கோபமாகி அந்த காரின் கண்ணாடிகளை உடைத்து நிறுத்தினார்கள். பிறகு காரை சூழ்ந்த மக்கள் ஓட்டுநரை இறங்குமாறு கூறினார்கள்.
காருக்குள் இருந்த இளைஞர் வேட்டி மற்றும் பனியன் அணிந்திருந்தார். போதையில் இருந்த அவர் கீழே இறங்காமல், காரின் மீது ஏறி நின்றார். பிறகு சிகரெட் பிடித்தபடி அங்கிருந்த மக்களிடம் பிரச்னை செய்தார்.

தன் இருப்பிடத்தை பற்றி தெளிவாக சொல்லாமல், ‘நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளேன்’ என்று கூறி மக்களை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர்.

விசாரணையில் அவர் சேலத்தைச் சேர்ந்த ஆண்டனி என்று தெரியவந்துள்ளது. மன அழுத்தம் பிரச்னைக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவரின் காரை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



















