ஜனநாயகன்: "பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா" - விஜய்க்கு சிம்பு,...
'பனை மரத்துக்கு லஞ்சம்' - அலையவிட்ட கிராம நிர்வாக அலுவலர்; கொத்தாகத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (40). விவசாயியான இவர், தனது நிலத்திலிருந்த 6 பனை மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, செந்தில் மீது வழக்குப் பதியாமல் இருக்க, புதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலரான குணசேகரன் ரூ.40 ஆயிரம் செந்திலிடம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கொடுத்த செந்தில், மீதிப்பணத்தைக் கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து, மீதிப் பணத்தைத் தரும்படி குணசேகரன், செந்திலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பிரபுவிடம், செந்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்திலிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.
அப்போது, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன்தான் வெளியில் இருப்பதாகவும், கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து, திருச்செங்கோடு சிஎச்பி காலனி கிராம உதவியாளர் தேவி வீட்டுக்குச் சென்ற செந்தில் ரூ.20 ஆயிரம் பணத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, தனது கணவர் விஜயகுமார் அருகே உள்ள தேநீர்க் கடையில் நின்று கொண்டிருப்பதாகவும், அவரிடம் கொடுத்து விடும்படியும் தேவி கூறியுள்ளார்.
இதையடுத்து, தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த தேவியின் கணவர் விஜயகுமாரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, கிராம உதவியாளர் தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர்.
பனை மரம் வெட்டியதற்காக கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



















