வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நி...
தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு… எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே…’ என்று குரலெடுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ‘வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய் கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’ என்று தாய்மொழியாம் எம் தமிழை, ‘உயிருக்கு நேர்’ என்று வீரத்தோடு முழங்குகிறார்.
ஒருபோதும் அனுமதியோம்!
எம் உயிருக்கு நேரான தமிழுக்கு ஓர் ஆபத்து என்றால், ஒருபோதும் தமிழர்கள் ஓய்ந்திருப்பதில்லை. இந்தியை வைத்து தமிழை ஒழிக்கவும், ஒடுக்கவும், ஓரங்கட்டவும் ஒரு கூட்டம் முயலும் போதெல்லாம், அக்கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்யும் கடமையை செவ்வனே செய்துவருகிறார்கள் வீரத்தமிழர்கள். 1930-களில், வெள்ளையர்களை விரட்டியடிக்க வீரச்சமர் புரிந்துகொண்டிருந்த வேளையில், இந்தி மொழி ஆதிக்கத்தையும் விரட்டியடிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை மொழி ஆதிக்கத்துக்கு எதிரான போர் ஓயவில்லை.

இந்தியர் அனைவரும் சமம். இந்திய மண்ணில் ஒரு மொழி பேசும் மக்களை மற்றொரு மொழி பேசுவோர் அரசியல் ரீதியிலோ, பண்பாட்டு ரீதியிலோ ஆதிக்கம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதிகாரத்தின் துணைகொண்டு தமிழர்கள் மீது இந்தியைத் திணிக்கும் அராஜகத்துக்கு எதிராக 1930-களில் வெடித்துக் கிளம்பியது மொழிப்போர். அதன் பிறகு, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில் கொழுந்துவிட்டு எரிந்தது.
தமிழிலிருந்து கிளைத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகள் பேசும் மக்களின் கூட்டு நிலப்பரப்பான சென்னை மாகாணத்தின் கல்விக்கூடங்களில் 1937-ல் இந்தி புகுந்தது. அதைத் தொடங்கிவைத்த ‘பெருமை’, ராஜாஜி எனப்படும் சி.ராஜகோபாலாச்சாரியாரையே சாரும்.
சென்னை இந்திப் பிரசார சபாவில் பேசினார் ராஜாஜி. என்ன பேசினார்? ‘தென் இந்தியர்கள் வட இந்தியாவுக்குச் சென்றால், அங்கு வியாபாரம் செய்வதற்கும் அரசியல் தொடர்புக்கும் இந்தி தெரிந்திருப்பது அவசியம். எனவே, இங்கு கட்டாயப் பாடமாக இந்தி இருக்க வேண்டும்’ என்றார் ராஜாஜி.
உண்மை நோக்கம் அதுவல்ல. ‘வட இந்தியாவுக்குப் போய் வியாபாரம் செய்பவர்களோ, அங்கு போய் அரசியலில் ஈடுபடுபவர்களோ, தேவைப்பட்டால் இந்தியைக் கற்றுக்கொள்ளப்போகிறார்கள். அதற்கு ஏன் பள்ளிப் பாடத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்?’ என்ற கேள்வியை தமிழறிஞர்கள் எழுப்பினார்கள்.

வர்ணாசிரம தர்மம் காக்க..!
பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாகக் கொண்டுவருவதற்கு ஏன் அவர்கள் முயல்கிறார்கள் என்பதற்கான காரணம் அவர்களின் வாயிலிருந்தே வந்தது. ‘ராமராஜ்ஜியம் அமைப்பதற்கும், வர்ணாசிரம தர்மத்தைக் காப்பதற்கும் இந்தி மொழியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும்’ என்று கூறினார் காங்கிரஸ் கட்சித் தலைவரான சத்தியமூர்த்தி. இதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்.
1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று நீதிக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ராஜாஜி, வடநாட்டு இந்தியை தென் இந்தியாவில் திணிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டினார். ‘இந்துஸ்தானி கட்டாயப் பாடமாக்கப்படும்’ என்ற அபாய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அதற்கு எதிரான முதல் குரல் சி.என்.அண்ணாதுரையிடமிருந்து எழுந்தது. 1937-ம் ஆண்டு ஆகஸ்ட்27-ம் தேதி துறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பேசிய சி.என்.அண்ணாதுரை, இந்தித் திணிப்பை எதிர்த்து கடுமையாகப் பேசினார்.
மறுநாள், ஆகஸ்ட் 28. இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுவதைக் கண்டித்து, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டனக் கூட்டம் நடத்தியது. அதற்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டவர் வி.டி.நாடிமுத்து. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. வரவேற்புரை ஆற்றிய த.வே.உமாமகேசுவரம், ‘காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் பயந்து வரமுடியவில்லை என்று .டி.நாடிமுத்து கடிதம் எழுதியிருக்கிறார். இது ஆண்மைத் தமிழனுக்கு அழகாகுமா?’ என்று ஆவேசப்பட்டார்.
போருக்குத் தயாராகுங்கள்!
ஒரு முக்கிய வரலாற்றுச் செய்தியையும் உமாமகேசுவரம் அப்போது பகிர்ந்தார். அதாவது, ‘1910-ம் ஆண்டு, தமிழை கட்டாயப் பாடமாக்கக் கூடாது என்று அரசியல் செல்வாக்கு பெற்ற கல்வி இலாகா டைரக்டர் வி.கிருஷ்ணசாமி அய்யர் கூறினார். அப்போது தோன்றியதுதான் கரந்தைத் தமிழ்ச்சங்கம்’ என்று அந்த அமைப்பு தோன்றியதன் பின்னணியை அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில், முக்கியத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ‘இந்தியை 1, 2, 3 ஆவது பாரங்குட்கு கட்டாயப் பாடமாக வைப்பதுடன், மேல் வகுப்புக்கு சரித்திரப் பாடத்தை இந்தியில் பயிற்றுவித்தல் வேண்டுமென அரசியலார் செய்யும் முடிவை கரந்தை தமிழ்ச்சங்கம் ஆதரவின் கீழ் கூடியுள்ள தஞ்சைப் பொதுமக்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்பதுதான் அந்தத் தீர்மானம். அதுதான், இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

1937 செப்டம்பர் 5-ம் தேதி சென்னை சௌந்தரிய மஹாலில் கட்டாய இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது தமிழர்களை அடிமையாக்கும் தந்திரம்’ என்றார். அக்கூட்டத்தில் பேசிய சி.என்.அண்ணாதுரை, ‘போருக்குத் தயாராகுங்கள்’ என்று தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அதன் பிறகு, ஊர்கள்தோறும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.
1938 பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில், இந்தித் திணிப்பை எதிர்த்து பெரியார் போர்முரசு கொட்டினார். மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக, பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புவரை கட்டாயமாக இந்தியைப் போதிக்க வேண்டும் என்ற உத்தரவு 1938 ஏப்ரல் 21-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் மே 28-ம் தேதி ‘தமிழ்ப்பாசறை’ கூட்டம் நடைபெற்றது. அதில், பெரியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உட்பட பலர் பங்கெடுத்தனர்.

சென்னையில் முதல்வர் ராஜாஜி வீட்டின் முன்பு இந்தித் திணிப்பைக் கண்டித்து 1938 ஜூன் 3-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது. பலர் கைது செய்யப்பட்டனர். இந்தித் திணிப்பின் ஆபத்தை மக்களிடம் பரப்புவதற்காக ‘தமிழர் பெரும்படை’ தொடங்கப்பட்டது. பட்டுக்கோட்டை அழகிரிசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோர் தலைமையில் சென்னையை நோக்கி நடைப்பயணம் தொடங்கியது. அந்த நடைப்பயணத்தை திருச்சியில் தொடங்கிவைத்தார் பெரியார். 234 ஊர்களின் வழியாக 42 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அவர்களை, சென்னையின் எல்லையில் வரவேற்றார் மறைமலை அடிகள்.
சிறை சென்ற பெரியார்!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, பெரியாருக்கு இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்தால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியார், பின்னர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அபராதத் தொகையைக் கட்ட மறுத்ததால், பெரியாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

1938 நவம்பர் 13-ம் தேதி சென்னையில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், ஈ.வெ.ராமசாமியை இனிமேல் ‘பெரியார்’ என்றே அழைக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானித்து பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் ஏராளமான பெண்கள் பங்கேற்றார்கள். அதற்காக பல பெண்கள் சிறைக்கும் சென்றார்கள். கைக்குழந்தைகளுடன் பல பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள். கைது செய்யப்பட்ட பெண்களிடம், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமையா, ‘தெரியாமல் செய்துவிட்டோம் என்று மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்கிறேன். உங்கள் கணவர்கள் வருந்துவார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு, ‘நாங்கள் எங்கள் தாய்மொழிக்காகப் போராட வந்திருக்கிறோம். இதில் தலையிட எங்கள் கணவர்களுக்கே உரிமையில்லை. அவர்கள் அப்படிப்பட்டவர்களும் அல்லர். எங்களால் மன்னிப்புக் கேட்க முடியாது’ என்று உறுதிபடக் கூறினார்கள் அந்தப் பெண்கள்.
சென்னை மாகாண தமிழர் மாநாடு 1938 டிசம்பர் 26, 27 தேதிகளில் வேலூரில் நடைபெற்றது.
அதில், ‘தமிழர்களின் தலைவர் பெரியாரே’ என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீதிக் கட்சியின் 14-வது மாகாண மாநாடு சென்னையில் கூடி, பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்தது. சிறையில் கடும் வெப்பம் காரணமாக அவதிப்பட்ட பெரியார், வயிற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றதற்காக அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. சென்னை சௌகார்பேட்டையிலுள்ள இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன்பு இந்தித் திணிப்பைக் கண்டித்து தொடர்ச்சியாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
1938 டிசம்பர் 5-ம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ல.நடராசன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், திருமணம் ஆகாதவர். அவருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

நடராசன்… முதல் பலி!
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராசன் நோய்வாய்ப் பட்டிருந்தார். ‘மறியலில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால், உன்னை விடுதலை செய்கிறோம்’ என்று அரசு கூறியது. ‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’ என்று மறுத்துவிட்டார் நடராசன். உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ல.நடராசனின் உயிர் 1939 ஜனவரி 15-ம் தேதி பிரிந்தது. மொழிப்போரின் முதல் தியாகியானார் தலித் சமூகத்தைச் சேர்ந்த நடராசன். அவரது மரணம் தமிழ் சமூகத்தைத் தட்டியெழுப்பியது.
செட்டிநாட்டு குமாரராஜா முத்தையா செட்டியாரின் விருப்பப்படி, நடராசனின் உடல், கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்த காரில் ஏற்றப்பட்டது. அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து கார் புறப்பட்டது. கூடவே, சுமார் ஐயாயிரம் பேர் கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். டாக்டர் தர்மாம்பாள், என்.சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், சி.என்.அண்ணாதுரை, என்.வி.நடராஜன் உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.
கந்தசாமி கோவில் தெரு, தேவராஜ முதலியார் தெரு, தங்கசாலை வீதி, கொத்தவால் சாவடி, பிராட்வே, போர்ச்சுகீஸ் வீதி, ஏழு கிணறு பகுதிகள் வழியாகச் சென்ற பேரணி, மூலக்கொத்தளம் சுடுகாட்டை அடைந்தது. அங்கு நடராசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடராசனின் மரணம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. அவர் இறந்து மூன்றாம் நாள் (ஜன 18) சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் ராஜாஜியை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அப்போது, ‘நடராசன் என்கிற ஹரிஜன சிறுவர், இந்து தியாலஜிகல் பள்ளிக்கு எதிரில் மறியல் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது’ என்றார் ராஜாஜி.

முதல்வரின் பதில் பெரும் சர்ச்சையானது. நடராசனின் தந்தையான லட்சுமணன், ‘என் மகனுக்கு தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அப்படியிருக்கும்போது, அவனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று முதல்வர் சொல்வது மக்களை ஏமாற்றும் முயற்சி’ என்று வேதனையோடு கூறினார்.
இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் உணர்ச்சி அலையை உண்டாக்கியது நடராசனின் மரணம். பல ஊர்களில் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. அதில், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி எதிர்ப்புப் போர் மேலும் தீவிரமடைந்தது.
நடராசன் - தாளமுத்து!
செளகார்பேட்டையிலுள்ள இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு தொடர்ச்சியாக மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தாளமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன் – மீனாட்சி தம்பதியின் மகன் தாளமுத்து திருமணம் ஆனவர். அவருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வயிற்று வலி காரணமாக சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாளமுத்து, 1939 மார்ச் 11-ம் தேதி மரணமடைந்தார்.
தாளமுத்துவின் இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரம் பேர் பங்கேற்றார்கள். இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு இறுதி ஊர்வலம் நின்றது. ‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக.. காங்கிரஸ் ஆட்சி ஒழிக’ என்று முழக்கங்கள் எழுந்தன. நடராசன் புதைக்கப்பட்ட அதே மூலக்கொத்தளம் சுடுகாட்டில், அவரது சமாதி அருகிலேயே தாளமுத்துவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. தாய்மொழி காக்க உயிர்நீத்த அந்த விவகாரம், ஐ.நா வரை எதிரொலித்தது.

மொழிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், பெரியாரை விடுதலை செய்ய முதல்வர் ராஜாஜி உத்தரவிட்டார். 167 நாட்கள் சிறையில் அடைபட்டிருந்த பெரியார், 1939 ஏப்ரல் 22-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெரியார் விடுதலை செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, மொழிப்போரில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனாலும், ‘கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது’ என்று பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த நேரத்தில், ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைப்பதில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்ததால், மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் ராஜினாமா செய்தன. 1939 அக்டோபர் 28-ம் தேதி ராஜாஜி அரசும் ராஜினாமா செய்தது. 1940 பிப்ரவரி 21-ம் தேதி கட்டாய இந்தி உத்தரவு ரத்துசெய்யப்பட்டது.
ஆனால், முதல் முயற்சியில் சூடுபட்டும் காங்கிரஸ் அரசு திருந்தவில்லை. இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை 1948-ல் மீண்டும் கொண்டுவந்தது ஓ.பி.ராமசாமி ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு. அப்போது, இரண்டாவது மொழிப்போர் வெடித்தது.
- தொடரும்
- மணா (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘உயிருக்கு நேர் – தமிழ் மொழிப்போர் பின்புலத்துடன்’ என்ற நூலின் ஆசிரியர், மொழிப்போர் குறித்த ‘உயிருக்கு நேர்’ என்ற ஆவணப்படத்தின் இயக்குநர்.!)















