Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்க...
வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!
மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.
மலைகள் சூழ்ந்த வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி ஓர் அற்புதத் தலம். கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மார்க்கத்தில் பயணித்து, ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் வழியே பாலமதி மலையை அடையலாம்.
எட்டுக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலை மீது பயணிப்பதே அலாதியான அனுபவம். பாலமதியில் முருகப்பெருமானின் ஆலயத்தின் அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும்.
வலதுபுறம் வலம்புரி விநாயகரும் இடதுபுறம் விசிறி சுவாமியாரும் வீற்றிருக்கிறார்கள். அவர்களை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முருகப்பெருமானைத் தரிசனம் செய்யலாம்.
பொதுவாக வேலேந்திய வீரனாக தேவசேனாபதியாகக் காட்சி கொடுக்கும் முருகன் இங்கே பாலகனாக அருள்கிறார். பாலகன் என்றால் சாதாரணக் குழந்தை அல்ல. மும்மூர்த்திகளும் இணைந்த வடிவம். பொதுவாகவே முருக என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும்போது, `மு' முகுந்தனையும், `ரு' ருத்திரனையும், `க' எனும் கமலவாசனாம் பிரம்மனையும் சேர்ந்த வடிவினன் என்பதைக் குறிக்கும்.
இத்தலத்தில் முருகப்பெருமான் அவ்வாறு மும்மூர்த்திகளும் சேர்ந்த பாலக வடிவினனாக அருளுவதாக ஐதிகம். குழந்தை என்றாலும் மூர்த்தி பிரமாண்டமாக உள்ளது. ராஜ அலங்காரத்தோடு புன்முறுவல் காட்டி அருளும் இந்த முருகப்பெருமானைத் தரிசனம் செய்வதே பாக்கியம் என்கிறார்கள் பெரியோர்கள்.

பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன். சந்திரன் குழந்தை முருகனை வழிபட்ட தலமாக இருக்கலாம் என்பதால் இத்தலத்துக்கு பாலமதி என்று பெயர் வந்தது என்கிறார்கள் பெரியோர்கள்.
அதற்கு சான்று நமக்கு அங்கு தோன்றும் நிம்மதிதான். எவ்வளவு கவலையோடு இந்த முருகன் சந்நிதிக்கு வந்தாலும் வந்த கணத்தில் அக்கவலை மறைந்துபோவது இங்கு நிகழும் அற்புதம்.
இத்தலத்தில் உற்சவர் அழகிய திருவடிவோடும் தேவியர் இருவரோடும் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகள் உள்ளன.
ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலதுபுறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்துள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின் தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது.
இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலதுபுறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார்.
உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு, 'பாலமதி மலைக்குச் செல்' என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதியைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்தத் தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார்.
1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்து கிடந்த இந்தக் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப் புனரமைத்தும் கொடுத்தார்.
அப்படி அவர் புனரமைத்துக் கொடுத்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அங்கேயே ஜீவசமாதி அடைந்த ராமகிருஷ்ண சாதுவின் சந்நிதியிலும் வழிபடுங்கள். வாழ்வில் வளமும் நலமும் நிச்சயம் கிடைக்கும்.





















