Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்க...
ADMK - BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' - அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார்.
புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா'வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்று வரவேற்றனர்.

நயினார் நாகேந்திரன் 'பரப்புரை பிரசாரப் பயணம்' முதல் முறையாகத் தொடங்கியபோது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் பரப்புரைப் பயண நிறைவு விழாவிலும் பங்கேற்க அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
மேலும், புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாட்டில் கை உயர்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும்" எனப் பேசியதும் சமூக ஊடகங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய நயினார் நாகேந்திரன், ``கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் எனக் குற்றம்சாட்டுகிறேன்" எனப் பேசி, விஜய்க்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் விவாதமாகியிருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமையும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டுக்கு வரும்' என உரையாற்றிய அமித் ஷா, சம்பிரதாயத்துக்காக ஒருமுறைக்கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை என்பதும் புகைச்சலை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை கூட்டம் முடிந்து திருச்சி தனியார் விடுதியில் தங்கிய அமித் ஷா பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்ததாகவும், 'பாஜகவிற்கு 50 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும்' என அமித் ஷா திட்டவட்டமாகக் கூறியதாகவும் தகவல் வெளியானது. அதற்கு அ.தி.மு.க தரப்பில் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டாம் நாள் பயணமான நேற்று, திருச்சி மன்னார்புரம் பகுதியில் நடைபெற்ற 'மோடி பொங்கல் விழா'வில் பங்கேற்ற அமித் ஷா, விழா முடிந்தபிறகு நட்சத்திர விடுதிக்குத் திரும்பினார்.
இரண்டாவது நாளும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அமித் ஷாவைச் சந்திக்க 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அமித் ஷாவுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால், அ.தி.மு.க சார்பில் பெயர் சொல்லும்படியான நபராக எஸ்.பி. வேலுமணி மட்டுமே பங்கேற்றார்.
இந்தச் சந்திப்பின்போது, கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்க்க பா.ஜ.க முனைப்புக் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்ததிலிருந்து, கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் இரு கட்சிகளும் திணறி வருகின்றன.
கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., பா.ம.க., அ.மு.மு.க மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலைப்பாடு தெரியாமல் என்.டி.ஏ கூட்டணி தவிக்கும் சூழலில் தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு எனப் பா.ஜ.க-வின் அழுத்தமும் கூட்டணியில் சலசலப்பு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தனது பிரசாரப் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மோடியைச் சந்தித்தார். ஆனால் இப்போது அமித் ஷாவின் பயணத்தின்போது, பிரசாரம் எனக் காரணம் சொல்லி அவரைச் சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்குள் சிக்கல் இருப்பது புலப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீசன், ``அமித் ஷா இந்தக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, கூட்டணி உறுதி என்பதைக் கையை உயர்த்தி அறிவித்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டணியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தார்.
இதை அப்போதே நம்மால் பார்க்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்தே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அ.தி.மு.க தலைமைக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க முடிந்தது.
களத்திலேயும் பா.ஜ.க - அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரிதாக ஒட்டு உரசல் இல்லாமல்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் என்.டி.ஏ கூட்டணியை மெகா கூட்டணியாக்க வேண்டும் எனப் பா.ஜ.க பிடிவாதமாக இருக்கிறது.
அதற்காக அ.மு.மு.க, ஓபிஎஸ் போன்ற கட்சிகளை உள்ளே இழுக்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-வைத் தவிர வேறு யாருக்கும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பா.ம.க எப்போதும் அ.தி.மு.க கூட்டணிக்கு வரத் தயாராக இருக்கும்.
இந்த முறை பா.ம.க-விலும் அப்பா - மகன் பிரச்னை இருப்பதால், இருவரும் சேர்ந்து வருவார்களா என்பதைத் தாண்டி, வருவார்களா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்கிற ரீதியில், பா.ம.க-வுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்ற தெளிவின்மையும் தொடர்கிறது.

நயினார் நாகேந்திரன் யாத்திரையைத் தொடங்கும்போது அதில் கலந்துகொண்டு பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதைப் போல காண்பித்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
எனவே அமித் ஷா வரும்போது கூட்டணியில் இருக்கும் சிக்கல்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு, எல்லோரும் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், எந்தப் பிரச்னையும் தீர்ந்தபாடில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.
முன்பு கரூர் சம்பவத்துக்கு விஜய்தான் காரணம் என்ற ரீதியில் பேசிய பா.ஜ.க, இப்போது அந்தச் சம்பவம் மூலம் த.வெ.க-வை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பு என்றே கருதுகிறது. அதனால்தான் கரூர் சம்பவம் நடந்ததிலிருந்து விஜய்யைக் காப்பாற்றும் வேலையை பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், தமிழிசை எனத் தொடங்கி, சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியதுவரை எல்லாவற்றையும் நாம் கவனித்து வருகிறோம்.
எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எல்லா வேலைகளையும் செய்தார்கள். அது எதுவும் பலனளிக்கவில்லை என்பதால், இப்போது விஜய்க்கு கரூர் சம்பவம் தொடர்பாக 12-ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்புகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் மீண்டும் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலையைத் தொடங்கலாம்.

அமித் ஷா - வேலுமணி சந்திப்பில் கண்டிப்பாக கூட்டணியை விரிவாக்கும் திட்டம் குறித்து பேசியிருப்பார்கள். செங்கோட்டையன் அ.தி.மு.க-வில் இருக்கும்போதே '6 அமைச்சர்கள் டிடிவி, ஓபிஎஸ்-ஸை உள்ளே கொண்டுவர வேண்டும் என விரும்புகிறார்கள். எடப்பாடிதான் பிடிவாதமாக இருக்கிறார்' என்றார்.
அவரை கட்சியிலிருந்து நீக்கும்போது அந்த 6 பேரும் குரல் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆனால் கட்சிக்குள் 'கட்சிகள் இணைப்பு' பேச்சு இருந்துகொண்டேதான் இருக்கிறது. 'டிடிவி, ஓபிஎஸ் வாக்குகள் குறைவாக இருந்தாலும்கூட அதுவும் தேர்தலில் ஒரு ஆளுமை செலுத்துமே' என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. அதனால் வேலுமணியிடம் 'எடப்பாடியை மெகா கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும்' என ஆலோசனை வழங்கியிருக்கலாம்.
அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும்போதே 18 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு 20 சதவிகித தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பா.ஜ.க-வை 30 சீட்டுக்குள் அடக்க வேண்டும் என்றே முயற்சி செய்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை வேலுமணி - அமித் ஷா சந்திப்பில் நடந்திருக்கும். ஆனால் இதில் எடப்பாடியின் கைதான் ஓங்கும் எனக் கருதுகிறேன்.
பா.ஜ.க நிற்கும் இடங்களில் தி.மு.க இறங்கி வேலை பார்த்தால் பா.ஜ.க-வைக் காலி செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இது எடப்பாடிக்கும் தெரியும். அதே நேரம், பா.ஜ.க தனக்கான வாக்கு வங்கி தனித்துத் தெரியவேண்டும் என்பதையும் நோக்கமாக வைத்திருக்கிறது.
மேலும், ஒருவேளை அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால், அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க ஆட்சியில் பங்கு கேட்கும் என்பதும் எடப்பாடிக்குத் தெரியும். அதனால் 'தனித்த மெஜாரிட்டியில் வெற்றிபெற வேண்டும்' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பார். இந்தக் கணக்கெல்லாம் சேர்த்துதான் தொகுதிப் பங்கீடு நடக்கும்.
புதுக்கோட்டை மேடையில் 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும்' எனப் பேசிய அமித் ஷா ஒருமுறைகூட எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூறவில்லை. அதனால் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமையை மாற்றுவதற்கான திட்டம் அமித் ஷாவிடம் இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது.
அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், அதை இப்போது வெளிப்படையாக பா.ஜ.க சொல்லாது. அப்படிக் கூறிவிட்டால், கூட்டணிச் சூழல் இன்னும் பாதகமாகத்தான் முடியும் என்பது பா.ஜ.க-வுக்கு நன்கு தெரியும்." என்றார்.

















