NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!
ஹைவேயில் அன்புமணி ; ட்ராஃபிக்கில் ராமதாஸ்; U-Turn போடும் டிடிவி? | தேர்தல் பரபர
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க பரபரப்பாக தன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. 'அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்' எனத் தொடர்ந்து கூறிவந்த அ.தி.மு.க தலைமை, அதற்கான எந்த முன்னெடுப்பிலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க-வுடன் அன்புமணி தரப்பு பா.ம.க, கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``பா.ம.க எங்களுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்துவிட்டோம். விரைவில் முழுத் தகவல்களையும் அறிவிப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி விரைந்திருக்கிறார. மாலை 7 மணிக்கு அமித் ஷாவைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
இன்று அமித் ஷாவைச் சந்திக்கும் எடப்பாடி கூட்டணி இறுதி வடிவம் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
இன்னும் சிலக் கட்சிகள் இணையும் என அ.தி.மு.க தலைமை நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது. எனவே, எல்லாக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும். பா.ஜ.க-வும் கணிசமான தொகுதிகளைக் கேட்டிருக்கிறது. எனவே, 'வரும் 20-ம் தேதிக்குள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும்' என அ.தி.மு.க தீர்மானித்திருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், அன்புமணி தரப்பு பா.ம.க, கூட்டணிக்குள் வந்திருக்கும் நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க-வையும் கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இது தவிர, 'கூட்டணி முடிவு குறித்து 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்' எனத் தெரிவித்திருக்கும் தே.மு.தி.க-வையும் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தவிர டிடிவி, ஒபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
அதே நேரம், அ.மு.மு.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், ``தேர்தல் நேரம் என்பதால் நண்பர், துரோகி, எதிரி என யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே, தேர்தல் சமயத்தில் அ.மு.மு.க விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்" என்றார்.
எனவே, டிடிவி தினகரன் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா? அன்புமணி அ.தி.மு.க கூட்டணியைத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், ராமதாஸின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது உள்ளிட்ட சிலக் கேள்விகளை மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.

அதற்கு அவர்,``இன்று காலை எடப்பாடி, அன்புமணி பா.ம.க-வை தன்னுடன் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். அதனால், ராமதாஸுக்கு த.வெ.க, தி.மு.க என இரண்டு விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன. இதுதவிர, ராமதாஸ் பா.ம.க, தனித்து தேர்தலைச் சந்திக்கவோ அல்லது ச்ரிகாந்தியிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கவோ செய்யலாம்.
த.வெ.க-வுக்கு ராமதாஸ் செல்வதாக இருந்தால் அவருடைய சீனியாரிட்டிக்கும், கௌரவத்துக்கும் புதிய கட்சிக் கூட்டணி சரிவருமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டுதான் முடிவெடுப்பார்.
ஒருவேளை ராமதாஸ் தி.மு.க கதவை தட்டலாம். அவர் தி.மு.க-வை தேர்வு செய்தால், தி.மு.க-வுக்குதான் நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே, ராமதாஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க-வுக்கு சிக்கல் இருக்கும். இன்னும் சிலக் கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. அது தவிர தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருக்கிறது. ராமதாஸ் வருகையை வி.சி.க எப்படி எதிர்கொள்ளும் என்றக் கேள்வியும் இருக்கிறது.
மேலும், கடந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க இல்லாமலே தேர்தலை எதிர்க்கொண்டது தி.மு.க. எனவே, பா.ம.க கூட்டணிக்குள் வருவது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலைதான் தி.மு.க-வுக்கு. இத்தகைய சூழலில் கூட்டணி அமைக்கும் விவகாரம் ராமதாஸுக்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான்.

இதுமட்டுமில்லாமல், பா.ம.க ஓட்டு பலம் ராமதாஸுக்கா... அன்புமணிக்கா... யாருக்கு அதிகம்? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அதனால் தொகுதிப் பங்கீடு கேட்பதும், கொடுப்பதும் சற்று கடினமாகவே இருக்கும்.
சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் ஒன்றில் பேசிய ராமதாஸ், ``அன்புமணி ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை" எனப் பேசியிருந்தார். மேலும், தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியைதான் அங்கீகரிக்கிறது. அதனால், பா.ம.க-வின் மாம்பழச் சின்னத்தை அன்புமணிக்கு கொடுக்கும் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது.
இன்னொருபுறம், டெல்லி உயர் நீதிமன்றம், ``உங்களுக்குள் பிரச்சனை இருந்தால் நீங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்வைத் தேடிக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துவிட்டது. அதனால் அன்புமணி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறுவார் என்பது எதிர்பார்த்ததுதான். எனவே, அன்புமணி இருக்கும் கூட்டணிக்கு ராமதாஸால் செல்ல வாய்ப்பு மிக மிகக் குறைவு.
ராமதாஸ் பேசிய வார்த்தைகள், அவர் எடுத்த முடிவுகள் மூலம் அவர்தான் உண்மையான பா.ம.க என நம்புகிறார் என்பதை அறிய முடிகிறது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, ``அன்புமணிக்கும் பா.ம.க-வுக்கும் சம்பந்தமில்லை" என பகிரங்கமாக அறிவித்தார். ஒருகட்டத்தில் "அன்புமணி என் மகனே அல்ல" என்றெல்லாம் பேசியிருக்கிறார். எனவே, இவ்வளவு நடந்தப்பிறகும் ராமதாஸ் அன்புமணியுடன் கூட்டணிக்காக இணைவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அப்பா - மகன் இணைப்புக்கு எத்தனையோ பேர் பலமுறை முயற்சி செய்து பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. எனவே, இப்போதுவரை ராமதாஸ் அன்புமணி இருக்கும் கூட்டணிக்குள் செல்லமாட்டார் என்பது என் கணிப்பு. மேலும், ராமதாஸை தோற்கடிக்கக் எதிரணியில் இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது.
இது எல்லாவற்றையும் கடந்து ராமதாஸ் அதிமுக-வுடன் கூட்டணிக்குச் சென்றால், தேர்தல் அரசியல் என்பது 'கடைசி நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற விதியின் கீழ் இயங்குகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
டிடிவியை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பது உண்மையல்ல. அ.மு.மு.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன்,` `கடவுள், மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களின் பின்னால் அமுமுக செல்லாது" எனப் பேசினார். இது யாரைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதே பொதுக்குழுவில், ``தேர்தல் நேரத்தில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்க முடியாது" என்றக் கருத்தும் கூறியிருக்கிறார். 'எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம்' எனப் பலமுறை தெரிவித்திருக்கிறார். அப்படியானால், எதிரிகள் துரோகிகள் எனக் குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேசியது திமுக-வைக் கூட குறிப்பிடலாம். இது அரசியல்... எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்." என்றார்.













