செய்திகள் :

தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2

post image

‘இந்தி எதிர்த்திட வாரீர் – நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்’ என்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘இன்னலை ஏற்றிட மாட்டோம் – கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ, கன்னங் கிழிந்திட நேரும் – வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்’ என்று வீருகொண்டு எழுகிறார்.

ஆட்சி மொழி தொடர்பாக அரசமைப்பு சபையில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்கள் முக்கியமானவை. ஆட்சி மொழி தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். ‘இந்தி ஆட்சிமொழியாக ஆக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், இன்னொரு நாட்டுப் பிரிவினையைத் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்’ என்று அரசமைப்பு சபையில் 1948-ம் ஆண்டு அவர் வாதிட்டார்.

மொழிப்போரின் வீர வரலாறு
மொழிப்போரின் வீர வரலாறு

அனந்தசயனம் ஐயங்கார் உட்பட 68 பேர் கையெழுத்திட்டு அரசமைப்பு சபையில் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர். அதாவது, ‘தேவநாகரி லிபியைக் கொண்ட இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருத்தல் வேண்டும் என்றாலும், அரசமைப்பு அமலுக்கு வந்த பிறகு 10 ஆண்டு காலம்வரை, ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இருக்கும். அரசின் நடவடிக்கைகளுக்கு இரு மொழிகளையும் பயன்படுத்திக்கொள்ள நாடாளுமன்றம் பின்னர் சட்டம் இயற்றிக்கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்காக, எந்த ஒரு வட்டார மொழியையும் ஏற்றுக்கொள்ளலாம்’ என்பதுதான் அந்தத் திருத்தம்.

தமிழகத்தைச் சேர்ந்த கோவை ராமலிங்கம், வடபுலம் தென்னகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டி பேசியபோது, ‘இந்தி பேசும் மக்கள் தங்கள் ஆதிக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.. தென்னகம் மனமுடைந்து பேயிருக்கிறது. விடுதலையையும், தன்னுரிமையையும் பெற்றுவிட்டதாக இங்குள்ளவர்கள் உணர்கிறார்கள். ஆனால், தென்னகத்தில் அந்த உணர்வு தென்படவில்லை. அங்கு ஒரு கசப்பு உணர்ச்சி நிலவுகிறது. அது எதில் கொண்டுபோய்விடும் என்று என்னால் தற்போது சொல்வது எளிதல்ல’ என்று தென்னகத்தின் உணர்வு நிலையை கோவை ராமலிங்கம் தெளிவாக எடுத்துவைத்தார்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய ஆண்டில், சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் வெற்றிபெற்றது. ராஜாஜி மீண்டும் முதல்வராக ஆவதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால், கட்டாய இந்தியை அவர் கொண்டுவந்ததால் தமிழகம் எப்படியெல்லாம் போர்க்கோலம் பூண்டது என்ற காட்சிகள் காங்கிரஸ் தலைவர்களின் கண் முன் வந்துபோயின.

அதனால், ராஜாஜி முதல்வராவதை பெரும்பான்மையான காங்கிரஸார் விரும்பவில்லை. டி.பிரகாசம் முதல்வராகத் தேர்வானார். கட்சிக்குள் நிலவிய பூசல்களால், ஓராண்டுக்குள்ளேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் டி.பிரகாசம்.

மொழிப்போரின் வீர வரலாறு
மொழிப்போரின் வீர வரலாறு

அதையடுத்து, 1947 மார்ச் மாதம் சென்னை மாகாணத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி பதவியேற்றார். கல்வி அமைச்சராக டி.அவிநாசிலிங்கம் பதவியேற்றார். முதல் முறை சூடுபட்டும் திருந்தாத காங்கிரஸ் அரசு, 1948 ஜூன் மாதம் இந்தித் திணிப்பு வேலையில் இறங்கியது. முதல் தடவையிலேயே பலத்த அடிவாங்கிய அனுபவம் இருந்ததால், இந்த முறை இந்தித் திணிப்பை கொஞ்சம் சாமர்த்தியமான முறையில் அமல்படுத்தினர்.

அதாவது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகவும், தமிழகத்தில் இந்தியை விருப்பப் பாடமாகவும் கொண்டுவருவதற்கான ஓர் ஆணையை ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிறப்பித்தது.

சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸின் ஆட்சிதான் நடைபெறுகிறது. அப்படியென்றால், ஒட்டுமொத்த மாகாணத்துக்கும் ஒரே உத்தரவைத்தானே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்தி விருப்பப்பாடம் என்று ஒரே ஆணையில் இரண்டு விதமான விதிகளை சூழ்ச்சியோடு கொண்டுவந்தார்கள்.

‘தமிழர் – தெலுங்கர் பிரிவை இன்னும் அதிகமாக்குவதற்கான சூழ்ச்சி இது’ என்று விமர்சித்த ‘விடுதலை’ ஏடு, ‘கட்டாய ஆரம்பக் கல்விக்குப் பணமில்லை என்று கூறும் சர்க்கார், ஹிந்திக்காக 15 லட்ச ரூபாய் விரயமாக்குவதைப் பொதுமக்கள் எவ்வாறு அனுமதிப்பார்கள்?’ என்று (22.06.1948)) கேள்வி எழுப்பியது.

‘பம்பாய் சென்டினல்’ என்ற ஆங்கில தினசரி ஏட்டில் ஜூன் 4-ம் தேதி தீட்டப்பட்ட தலையங்கத்தில், ‘ஹிந்துஸ்தானியோ, அதற்கு பதிலாகக் கற்பிக்கப்பட வேண்டிய பிற மொழிகளோ, ஆந்திரா, கேரளம், கர்நாடகா – ஆகிய பிரதேசங்களில் முதல் பாரம் முதல் மூன்றாவது பாரம் வரையில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராமசாமி நாயக்கரிடமும் அவரைச் சார்ந்த பிறரிடமும் சர்க்கார் இன்னமும் பயந்துகொண்டிருக்கிறது?’ என்ற உண்மையை அதில் உடைத்தது.  

மொழிப்போரின் வீர வரலாறு
மொழிப்போரின் வீர வரலாறு

இரண்டாவது முறையாக இந்தியைத் திணிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் அரசு இறங்கியவுடன், பெரியாரும், அண்ணாவும், தமிழறிஞர்களும், பிற தலைவர்களும், தமிழக மக்களும் கொதித்தெழுந்தனர். சென்னையில் 1948 ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி., டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்தி எதிர்ப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பெரியார், அண்ணா, ம.பொ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, சி.டி.டி.அரசு, இராமாமிர்தம் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றனர். சென்னை மவுன்ட் ரோடு, எண் 1, மீரான் சாயபு தெருவிலுள்ள பெரியாரின் இல்லத்தில் ஜூலை 19-ம் தேதி இந்தி எதிர்ப்புக் குழு கூடியது.

அதில் பெரியார் பேசினார். ‘இது மொழிப் போராட்டம் மட்டும் அல்ல. இது ஒரு கலாசாரப் போராட்டம். இது ஒரு மானாபிமானப் போராட்டம். இது ஓர் உரிமை வேட்கைப் போராட்டம். இந்தப் போராட்டத்தின்போது, எந்தவொரு திராவிடனாலும், எந்த ஓர் உண்மைத் தமிழ் மகனாலும் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. போராட்டத்தைத் தொடங்குவோம். மானமுள்ள மக்களாகப் போராடுவோம். மானத்தோடுப் போராடி மடிந்தாலும் தவறில்லை. நம் சந்ததியர் மேலும் வீரத்தோடு போராடி நாம் விட்டுச்செல்லும் பணியை நிறைவேற்றுவார்கள். மானத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்கள் திராவிடர்கள். எனவே, இந்தப் போராடத்தைக் ஒருபோதும் கைவிடாதீர்கள். குண்டு பட்டு இறந்தீர்கள் என்றாலும், குண்டு மார்பில் பாய்ந்திருக்கட்டும்’ என்றார் கர்ஜித்தார் பெரியார்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் எழுச்சிக் கூட்டங்கள். ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை சௌகார்பேட்டை தியாலஜிக்கல் பள்ளி முன்பு அண்ணா, சி.டி.டி.அரசு ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் தொடங்கியது. என்.வி.நடராசன், திராவிட மணி, தனலெட்சுமி அம்மையார், என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மறியலில் கலந்துகொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, தொண்டர்கள் அணி அணியாக மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காங்கிரஸ் அரசு கடுமையாக அடக்குமுறைகளை ஏவியது.

ஆனால், போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு அச்சமின்றி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆளுநர் பவநகர் மகாராசா, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி, கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் ஆகியோருக்கும் போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடி காட்டினர்.

மொழிப்போரின் வீர வரலாறு
மொழிப்போரின் வீர வரலாறு

தமிழகம் முழுவதும் போராட்ட அலை பரவியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவை காங்கிரஸ் அரசு பிறப்பித்தது. தடையாணையை மீறுவோம் என்று திராவிடர் கழகம் அறிவித்தது. பெரியார், கே.கே.நீலமேகம், மணியம்மையார் உட்பட ஏராளமானோர் தடை உத்தரவை மீறினார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1948 டிசம்பர் 19-ம் தேதி, கும்பகோணத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். துப்பாக்கிகளைத் திருப்பிப்பிடித்தும், தடிகளாலும் தாக்கியதுடன், பூட்ஸ் கால்களால் போராட்டக்காரர்களை உதைத்தனர். சிலரைக் கைது செய்து காட்டுப்பகுதியில் தனியாக விட்டுவிட்டு வந்தனர். அந்தப் போராட்டத்தின்போது, என்.வி.நடராசனை ரத்தம் சொட்டச்சொட்ட தாக்கி, அவரை விலங்கிட்டு வீதியில் இழுத்துச்சென்றனர் காங்கிரஸ் அரசின் காவல்துறை.

சென்னை மெமோரியல் ஹாலில் தமிழறிஞர் சி.இலக்குவனார் தலைமையில் மாகாண மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழன், கா.அப்பாதுரையார் உட்பட பலர் உரையாற்றினர். இந்தியை கட்டாயப் பாடமாகவோ, விருப்பப் பாடமாகவோ கொண்டுவருவதற்கு எதிராக பள்ளிகள் முன்பு ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

‘கட்டாய இந்தியை எதிர்த்துப் போராட தன்மானத் தமிழர் தயங்கமாட்டார்’, ‘இறுமாப்பு கொண்ட வடவரை வெற்றிகொண்ட தமிழ்க்குடியே வீறிட்டெழு’, காங்கிரஸ் சர்க்காரின் கொடுங்கோன்மை, கல்வி முறையிலும் தாண்டவமாடுவதா?’, ‘எதேச்சதிகாரிகளின் நினைப்பில் மண் விழுந்ததை உணர்வீர் அமைச்சரே’ என்று கல்வியமைச்சர் அவினாசிலிங்கத்துக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதினார்.

மொழிப்போரின் வீர வரலாறு
மொழிப்போரின் வீர வரலாறு

சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், ‘இந்தியை எதிர்த்தே தீர வேண்டும். அதை ஒழித்தே தீர வேண்டும். அதற்காக எந்த விலையையும் கொடுத்தாக வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்துவைக்க வேண்டியது சுடுகாட்டில்தான். அதற்குள் ஒரு கை பார்த்துவிடப் போகிறேன்’ என்று முழங்கினார்.

தமிழக மக்களின் உறுதிமிக்க போராட்டத்தைக் கண்டு அஞ்சிய காங்கிரஸ் அரசு, இந்தித் திணிப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கியது. கல்வி அமைச்சர் பதவியை அவிநாசிலிங்கம் ராஜினாமா செய்தார். புதிய கல்வி அமைச்சராக வந்த மாதவ மேனன், வரவேற்கத்தக்க சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனாலும், அவர் கொண்டுவந்த மாற்றங்களில் இந்தி மொழி விவகாரத்தில் மட்டும் ஒரு சிக்கல் இருந்தது. அதுதான் இன்னொரு மொழிப்போருக்கு வித்திட்டது.!  

(தொடரும்)

-மணா (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘உயிருக்கு நேர் – தமிழ் மொழிப்போர் பின்புலத்துடன்’ என்ற நூலின் ஆசிரியர், மொழிப்போர் குறித்த ‘உயிருக்கு நேர்’ என்ற ஆவணப்படத்தின் இயக்குநர்)

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்ட... மேலும் பார்க்க

இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

ட்ரம்ப் அரசு ரெஸ்ட்டே எடுக்காது போலும். அது தனது அதிரடிக்கு தயாராகிவிட்டது. நேற்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துள்ளார். இது அமெரிக... மேலும் பார்க்க

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்த... மேலும் பார்க்க

மும்பை: விலகும் விசுவாசிகள்: நெருக்கடியில் உத்தவ் வாரிசு; கோட்டையை தக்கவைப்பாரா ஆதித்ய தாக்கரே?!

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் த... மேலும் பார்க்க