Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருக்கிறது தேமுதிக. திமுக, அதிமுக என இரண்டு தரப்பும் தேமுதிகவுக்கு வலை விரிக்கிறது.

9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என பிரேமலதா கூறியிருந்தார். இந்நிலையில், இன்று தேமுதிகவின் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்திருந்தது. அதில், தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டுமென மா.செக்கள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 'வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன முடிவை எடுக்கப்போகிறோம் என மா.செக்களுடன் கலந்தாலசித்தோம். இங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எந்த கூட்டணிக்கு செல்லலாம் மா.செக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் நானே எடுத்து பார்த்து நிர்வாகிகளின் முடிவுப்படி கூட்டணி அமைப்போம்.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டுமென நினைப்பவர்கள் ஓரணியில் இணைய வேண்டுமென்பது எடப்பாடி பழனிசாமியின் கருத்து.
ஆட்சியின் முடிவில் தேர்தல் நேரத்தில் நலத்திட்டங்களை அறிவிப்பதை எல்லா கட்சிகளுமே செய்கின்றன. ஓய்வூதியத்திட்ட அறிவிப்பில் பயனாளர்களின் கருத்து என்னவோ அதுதான் எங்களின் கருத்தும்.

சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் என நிறைய பிரச்னைகள் இருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களே அதற்கு சாட்சி. இந்த ஆட்சியை 50-50 என்றே மதிப்பிடுவேன்.
வருகின்ற தேர்தல் ஒரு மாற்றமான தேர்தலாக இருக்கும். கூட்டணி கட்சிகளும் மந்திரி சபையில் பங்கேற்கும் சாத்தியம் இருக்கக்கூடிய தேர்தலாக இருக்கும்' என்றார்.
திமுக, அதிமுக, தவெக என மூன்று ஆப்சன்கள் வாக்குச்சீட்டில் கொடுக்கப்பட்டிருந்ததாக மா.செக்கள் கூறுகின்றனர். இந்த வாக்குப்பெட்டியை எண்ணி மாநாட்டில் முடிவை அறிவிப்போம் என பிரமேலதா கூறுகிறார்!


















