NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!
5 டன் விதை உற்பத்தி: மாமரத்து நிழலில் காளான் வளர்ப்பு... தினமும் ரூ.10,000 ஈட்டும் பட்டதாரி விவசாயி!
விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் சிறிய இடத்தில் கூட விவசாயம் செய்து சம்பாதிக்க முடியும். சத்தீஷ்கர் மாநிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர் காளான் ,வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். அங்குள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் இருக்கும் பஸ்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார். எம்.ஏ.யில் மூன்று பட்டங்கள் வாங்கி இருக்கும் ராஜேந்திர குமார் தனது தோட்டத்தில் எந்த விதக் கட்டமைப்பு வசதியும் இல்லாமல் வெறுமனே மாமரத்திற்கு அடியில் காளான்களை வளர்த்து வருகிறார்.
காளான் வளர்ப்பதற்குத் தேவையான வைக்கோல்களை தனது தோட்டத்தில் நெல் விளைவித்து அதிலிருந்து எடுத்துக்கொள்கிறார். இவர் தினமும் 50 கிலோ காளான் உற்பத்தி செய்வதாகவும், அதனை கிலோ ரூ.270 முதல் 300 வரை விற்பனை செய்வதாகவும் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ''காளான் வளர்க்க ஒரு பெட் தயாரிக்க ரூ.70 முதல் 80 வரை செலவாகிறது.

அதில் ஒரு கிலோ காளான் கிடைக்கிறது. விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோலை அப்படியே தோட்டத்தில் போட்டு எரித்து விடுவார்கள். இதனால் மற்ற நுண்ணுயிர்கள் அழிந்து விடுகிறது. எனவேதான் வைக்கோலை பயன்படுத்தி காளான் வளர்க்கலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய தந்தை ஏற்கெனவே வேளாண் துறையில் வேலை செய்கிறார். அவரும் இதற்கு உதவி செய்தார்.
2005ம் ஆண்டு படித்து முடித்த பிறகு காளான் வளர்க்க ஆரம்பித்தேன். தேவையான விதைகளை ராய்பூரில் உள்ள விவசாய அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்தேன். அதன் மூலம் 10 கிலோ காளான் உற்பத்தி செய்து அதனை உள்ளூரில் விற்பனை செய்தேன். 2006ம் ஆண்டு முதல் வைக்கோல் கொண்டு காளான் பெட் அமைத்து காளான் வளர்க்க ஆரம்பித்தேன். ஒடிசாவில் இருந்து 5 கிலோ விதை வாங்கி வந்தேன். அதில் 15 கிலோ காளான் கிடைத்தது.
மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை மழைக்காலத்தில் அதிக அளவில் காளான் விளைந்தது. ஆரம்பத்தில் விதைகளை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தேன்.
அதன் பிறகு விதைகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாய மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். எளிய முறையில் சாதாரண உபகரணங்களைக் கொண்டு காளானுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன்.
இதற்கு வேளாண் விஞ்ஞானிகள் எனக்கு உதவி செய்தார்கள். தரமான விதைகளை தயாரித்ததால் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் கிடைக்கும் காளான் அளவு 700 கிராமில் இருந்து ஒரு கிலோவாக அதிகரித்தது. இது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. 2014ம் ஆண்டு தினமும் 20 கிலோ காளான் உற்பத்தி செய்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தேன். இதனால் எனக்கு உள்ளூரில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். நேரடியாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களுக்கும் என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது.
படிப்படியாக காளான் உற்பத்தியை அக்டோபர் வரை நீட்டித்தேன். இதற்கு தேவையான சீதோஷண நிலையை உருவாக்கினேன். 70 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும் வகையில் காளான் படுக்கையை டிசைன் செய்தேன். காளான் படுக்கைக்குத் தேவையான வைக்கோலை தண்ணீரில் சுண்ணாம்பு கலந்து 15 மணி நேரம் வைக்கிறோம். இதன் மூலம் அதில் உள்ள நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தும் அகற்றப்படுகிறது.

எங்களது தோட்டத்தில் இருக்கும் மாமரத்தின் நிழலில் இந்தப் படுக்கையை உருவாக்கினேன். கோடைக்காலமான மே மற்றும் ஜூன் மாதங்களில்கூட மரத்திற்குக் கீழே 10 டிகிரி வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். அது காளான் வளர்க்க மிகவும் உகந்ததாக இருந்தது. மரத்து நிழலில் அதிக அளவில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதமும் இருந்தது. இதன் மூலம் தரமான காளான்கள் கிடைத்தது. இப்போது 2,000 காளான் படுக்கைகள் உருவாக்கி இருக்கிறேன். இதற்குத் தேவையான வைக்கோலை 150 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்து சேகரித்து அதனை சேமித்து வைத்துக்கொள்கிறேன்.
காளான் வளர 15 நாள்கள் பிடிக்கும். 12 முதல் 16 நாள்களில் அறுவடை செய்ய முடியும். காளான் அறுவடைக்குப் பிறகு வைக்கோல் உரமாக மாற்றப்பட்டு விடுகிறது. அதனை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறேன். 4 முதல் 5 டன் காளான் விதை உற்பத்தி செய்து அதனை கிலோ ரூ.120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஆயிரக்கணக்கானோர் என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர். தினமும் 50 கிலோ காளான் மூலம் தினமும் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது'' என்று தெரிவித்தார். காளான் வளர்ப்புக்காக ராஜேந்திரகுமாருக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.



















