NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!
இரண்டு வார ஓய்வில் S.J.சூர்யா; காத்திருக்கும் 'ஜெயிலர் 2' - 'கில்லர்' படப்பிடிப்பில் நடந்தது என்ன?
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் ', 'சர்தார் 2' எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

சிலம்பரசனின் 'மாநாடு' படத்திற்குப் பின் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த 2015-ல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்திற்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அவருக்கு அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்திற்காக சிகப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார்.

அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன. இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2'-ம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கி காத்திக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார்.
இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி - நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

'கில்லர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் 'கில்லர்' படப்பிடிப்பிலும், 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர்.
'இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்' என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
















