வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நி...
சென்னை: பயன்பாட்டுக்கு வந்த மெரினா `இரவு நேர காப்பகம்' - விரிவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி!
சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தளம் என்பதையும் தாண்டி, பலரின் வாழ்வாதாரத்திற்கான வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. சிறு உணவு கடைகள் தொடங்கி கைவினை பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், குதிரைகளை வைத்து பிழைப்பு நடத்துவோர், ஜோதிடம் பார்ப்பவர்கள், பாசிமணி விற்போர் எனப் பல்வேறு மக்கள் இந்த மெரினா கடற்கரையை நம்பித்தான் தங்களது வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர்களிலிருந்து பிழைப்புக்காக சென்னையை நோக்கி வந்தவர்கள். எவ்வித ஆதரவுமின்றி மலை, வெயில், புயல் என எல்லா காலக்கட்டங்களையும் கடந்து மெரினாவில் எதோ ஒரு மூலையில் போராட்டமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே இவர்கள் கண்ணகி சிலை பின்புறம் நீண்ட காலமாக தார்பாய் போட்டு தங்கி வாழ்வை நகர்த்துகிறார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோத்து அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்தில் இரவு நேர காப்பகம் ஒன்றைக் கட்டி முடித்துள்ளது. இதனை சமீபத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த இரவு நேர காப்பகத்துக்கு நேரில் சென்று பார்த்தோம்!
எப்படி இருக்கிறது இரவு நேர காப்பகம்?
2,400 சதுர அடிப் பரப்பில், 86 லட்சம் ரூபாய் மதிப்பில், இரவு நேர காப்பகம் கட்டப்பட்டுள்ளது. 80 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் இருக்கும் இந்தக் கட்டடம் கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நல்ல காற்றோட்டமான சூழலில் கட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருள்களும் தரப்பட்டிருக்கின்றன. தங்குபவர்களுக்கு மூன்று வேளையும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து அங்கு விசாரித்தபோது, அது மெரினாவில் தங்கியுள்ள அனைத்து ஆதரவற்ற மக்களுக்குமானதல்ல என்பது தெரிந்தது. நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 70 பேர் நீண்ட நாள்களாக மெரினாவில் வசித்து வருகிறார்கள். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி அவர்களுக்கென இரவு நேர காப்பகத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து இரவு நேர காப்பகத்தில் தங்கியிருக்கும் சரவணன் நம்மிடம் பேசும்போது,
"எங்களது பூர்வீகம் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதி. பிழைப்புக்காக சென்னை நோக்கி வந்தோம். கிட்டத்தட்ட15 ஆண்டுகளாக வியாபாரம் செய்து, இந்த மெரினா பீச்சையே எங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். இந்த பீச்சை நம்பியே எங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் சென்னை மண்டல துணை ஆணையரை மெரினா கடற்கரையில் சந்தித்துப் பேசினோம். மேலும் இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிக தங்குமிடத்தையாவது ஏற்படுத்தித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு முன்பு கண்ணகி சிலையின் பின்புறம் தார்ப்பாய் கொண்டு குடிலாக அமைத்து இரவு நேரம் கழிப்பறை வசதி இல்லாமல், தூங்குவதற்கு வசதி இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரும் சிரமப்பட்டோம். நாங்கள் அன்றாடங்காய்ச்சிகள். தினமும் வரும் வருமானத்தைக் கொண்டுதான் எங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
அந்தச் சமயம் ஆய்வுப் பணிக்காக வந்த சென்னை மண்டல துணை ஆணையர் கௌஷிக்-கிடம் இது குறித்து கேட்டபோது,
"வீடற்ற மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த இரவு நேர காப்பகம் துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்ட காலமாக மெரினா கடற்கரையை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றவர்கள். இவர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாக மேல் அதிகாரிகளுடன் பேசி இவர்களுக்கு மெரினா கடற்கரை ஓரத்திலேயே தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு சுழற்சி முறையில் இரவு நேர காப்பகத்திற்கு காவலர்களும், பராமரிப்புப் பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர சென்னையில் மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தங்குவோருக்கு, குடும்பமாக வியாபாரம் செய்வோருக்கு கன்டெய்னர் மாதிரியில் அருகிலேயே பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

மெரினாவில் வெவ்வேறு விதமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களைப் போன்ற இடம் விட்டு இடம் வாழும் மக்கள், வீடற்று மெரினாவையே நம்பி வியாபாரம் செய்வோர், முதுமையில் யாசகம் பெற்று வாழ்வோர் முதலியோருக்கான தங்குமிடங்கள் கட்டும் பணிகள், மெரினா கடற்கரை அருகிலேயே தொடக்க கட்டத்தில் இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடையும், அவர்களும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.















