BB Tamil 9: "சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?" - கேள்வி எழுப்பும் ப...
`தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்று என் கண்களுக்குத் தெரியாது' - டி.டி.வி.தினகரன்
அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுத்தனர், நிர்வாகிகள். தினகரனைப் புகழ்ந்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். ஏற்கெனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டனர். செக்யூரிட்டிகள், பவுன்ஸர்ஸ் பாதுக்காப்புப் பணியில் ஈடுப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தினகரனைப் புகழ்ந்த பின்னர் கருத்துக்களை முன் வைத்தனர்.

நிர்வாகிகளைத் தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினனரன், ``தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அது என்றைக்கும் தொடர வேண்டும். தமிழகத்தில் எந்தவொரு காரணத்தையும் கொண்டு, அது தேர்தல் வெற்றி அல்லது தங்களது கொள்கைகளுக்காக சாதி, மதம், கடவுகளின் பெயரை எந்தவொரு அரசியல் இயக்கமும், எந்தவொரு அமைப்பும் பயன்படுத்தி, மதங்களைக் கடந்து நட்போடு வாழ்கின்ற மக்களுக்குள் எந்தவொரு குழப்பமும் ஏற்படுத்தி விடக் கூடாது. தமிழகத்தின் பொது அமைதி கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் வெற்றி, தோல்வியைத் தாண்டிச் செயல்படுகிற இயக்கம் அமமுக.
ஜெயலலிதாவின் கொள்கைகளை அடுத்த நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்கின்ற இயக்கமாக அமமுக தொடங்கப்பட்டது. நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தொடங்கப்பட்டது இந்த இயக்கம். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமமுக தோல்வி அடைந்தவுடன், டி.டி.வி.தினகரன் கூடாரம் காலி என்றார்கள். 2021ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தோம். அதை புரிந்தும், புரியாமலும், தெரிந்தும் தெரியாமலும் இருந்ததால்தான் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து நடைபெறாமல் போனது.

ஆட்சி அதிகாரம் முக்கியம்தான். உள்ளாட்சி முதல் சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை ஓர் இயக்கம் இடம் பெற்றால் தான் மக்களின் நலனுக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிகாக ஓர் அரசியல் இயக்கம் செயல்பட முடியும் என்பதை தாண்டி லட்சியத்திற்காக, நாம் ஏற்று இருக்கின்ற கொள்கைக்காக, நம் தலைவர்களின் கொள்கைகளை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக என்னுடன் இணைந்திருக்கிறீர்கள். பதவிக்காகப் பலர் பல்லை இளித்துக் கொண்டு எங்கே சென்றாலும், இன்றைக்கு தமிழகம் முழுவதும் இந்த இயக்கம் உயிரோட்டத்துடன் இருப்பதற்கு, இன்னும் சொல்லப்போனால் 75 ஆண்டுக்கால கட்சிக்கும், 50 ஆண்டுகளை கடந்த கட்சிக்கும் எந்த விதத்திலும் சளைக்காமல் கட்டமைப்பை அமைத்திருக்கிறோம்.
அமமுக இடம் பெறப்போகின்ற கூட்டணிதான் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக, ஆட்சி அமைக்கின்ற கூட்டணியாக இருக்கும். அந்த இடத்தில் அமமுக இன்றைக்கு இருக்கின்றது என்றால், அதற்கு காரணம் தொண்டர்கள் உழைப்புதான். ஆளுங்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சியின் பலன்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என்னுடன் பயணிக்கின்ற தொண்டர்கள் இருப்பதால்தான்... எதற்கும் அஞ்சாமல் இந்த இயக்கத்தை வழிநடத்த முடிகிறது. எத்தனையோ சதவிகிதம் வாக்குகள் வைத்து இருப்பவர்கள் எல்லாம், புதிதாக ஒரு கட்சி வந்த பிறகு எப்படி எல்லாம் பிதற்றுகிறார்கள். கதறுகிறார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
ஆனால் உங்களில் ஒருவனான நான் எதற்கும் சிறிதும் அஞ்சாமல் ஜெயலலிதா காட்டிய பாதையில் பயணிக்கிறேன் என்றால், நமக்கு யாரைக் கண்டும் பயமும் இல்லை. யாரைக் கண்டும் பொறாமையும் இல்லை. இதனால் 8 ஆண்டுகளாக இந்த இயக்கம் தெளிந்த நீரோடையாகச் செயல்படுகிறது. உண்மையிலேயே இன்றைக்கு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு காரணமாக இருக்கப் போகிற இயக்கம் நாம்தான். யாரிடமும் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் தமிழகத்தின் நலனுக்காகச் செயல்படக்கூடிய, ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதற்கு அமமுக உறுதியாக துணை நிற்கும்.
ஏற்கெனவே ஆர்.கே.நகரில் என்னை சட்டசபைக்கு அனுப்பினீர்கள். அதே போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு 100-க்கு 100 சதவிகிதம் இருந்தபோதும், ஏன்? நான் வெற்றிபெறவில்லை என்று உங்களுக்குத் தெரியும். ஓட்டுக்குப் பணம் கொடுக்கமாட்டேன் என்று சொன்னதால், வெற்றி பெற முடியவில்லை. எதிர் அணியில் இருந்தவர்கள்கூட, `நீங்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்தால் மந்திரியாகி தமிழகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம்' என்றனர். நான் அப்படிப் பார்க்கவில்லை.

2026 தேர்தலில் உறுதியாக அமமுக சட்டமன்றத்திற்கு ஆளுங்கட்சியாகச் செல்ல இருக்கிறது என்பது உண்மை. ஆளுங்கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக, கூட்டணி ஆட்சியில் இடம் பெறப் போகின்றவர்கள் மேடையில் மட்டும் அல்ல, கீழேயும் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர முடியும் என்பது இயற்கை எழுதிய தீர்ப்பு. அதற்காக நான் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை. எந்தவொரு சமரசமும் உங்கள் பொதுச் செயலாளர் செய்து கொள்ளமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். ஏதேதோ செய்திகளை, வதந்திகளைப் பரப்புவார்கள். எதை பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கின்ற, உங்கள் மன ஓட்டம் எனக்குத் தெரியும். கூட்டணியில் சீட்டு பெற்று, உறுதியாக அதில் 80 சதவிகிதத்திற்கு மேல் வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்கு தமிழக மக்கள் நம்மை அனுப்ப இருக்கிறார்கள்.
தேர்தலுக்குத் தயாராகுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் யாரும் எந்த கவலையும் பட வேண்டாம். அந்தக் கூட்டணி வந்தால் இவருக்கு சீட்டு இருக்காது. இந்தக் கூட்டணி வந்தால் இவருக்கு சீட்டு இருக்காது. அந்தக் கூட்டணியில் சேர்ந்தால் இத்தனை சீட்டுதானே கிடைக்கும். இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் உள் குத்து வேலை பார்ப்பார்கள், இந்தக் கூட்டணிக்குச் சென்றால் நன்றாக இருக்குமே என எதையும் யோசிக்காதீர்கள். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்குத் தெரியாது. எந்த ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு நல்லதோ, அதை செய்வதற்கு என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அதிகாரத்தைக் கொடுத்து இருக்கிறீர்கள். உறுதியாக அமமுக கெளரவமான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைப்போம். அதில் அமமுக-வைச் சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள்" என்றார்.
















