Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்க...
10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!
ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
கூலித் தொழிலாளரான சஞ்சய் குமார் எப்படியும் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தொடர்ச்சியாக தனது மனைவியிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

அவர்களது தேடல் மூலம் வீட்டில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே சென்றது.
கடைசியாக சஞ்சய் குமாரின் மனைவி தனது 37வது வயதில் மீண்டும் கர்ப்பமானார். டாக்டர்கள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும் அப்பெண் மீண்டும் கர்ப்பமானார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அடுத்த நாளே ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்த பிறகுதான் கணவன் - மனைவி இருவருக்கும் நிம்மதி வந்தது.
அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த டாக்டர் நர்வீர் இது குறித்து கூறுகையில், ''இது மிகவும் ஆபத்தான பிரசவமாக இருந்தது. பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டது. எனவே 3 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. இப்போது தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
இது குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், ''எனது மூத்த மகள் தனக்கு சகோதரன் வேண்டும் என்று விரும்பினார். நானும் மகன் பிறப்பான் என்று நம்பினேன். எனது மகள்கள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனர்.
எனது மூத்த மகள் 12வது வகுப்பு படிக்கிறாள். எனது வருமானம் குறைவு என்றாலும் நான் அனைவரையும் படிக்க வைக்கிறேன். இது எங்களுக்கு 11வது குழந்தை. எங்களுக்கு ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எல்லாம் கடவுள் விருப்பப்படி நடக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார்.
சஞ்சய் குமார் தனது மகள்களின் பெயரை நினைவுபடுத்திக் கூப்பிட முடியாமல் திணறிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இத்தம்பதியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.




















