புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Phot...
மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி 66 இடங்களில் வெற்றி
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அதேசமயம் தேர்தல் நடக்கும் முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் 66 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளன. மும்பை அருகில் உள்ள கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சியில் அதிகபட்சமாக 21 பேர் இக்கூட்டணியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பது அரசியல் கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க 15 வார்டுகளிலும், சிவசேனா 6 வார்டுகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
இதே போன்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேயில் 7 பேர் இக்கூட்டணியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர பீவாண்டி மற்றும் பன்வெல் மாநகராட்சிகளில் தலா 6 பேர் பா.ஜ.க கூட்டணியில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாக செயல்படுவதாக தேசியவாத காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றன. வேட்பு மனு பரிசீலனையின் போது எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய ஆளுங்கட்சி பிரமுகர்கள் நிர்ப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சியில் சிவசேனா(உத்தவ்), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக அளவில் மனுக்களை திரும்ப பெற்றதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து வாபஸ் பெற வைத்ததாகவும் கூறப்படுகிறது. டோம்பிவலி நகர நவநிர்மாண் சேனா தலைவர் மனோஜ் கூட தேர்தலில் விலகி இருப்பதுதான் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தானேயில் பணபலம் வேலை செய்வதாக கூறி ராஜ் தாக்கரே கட்சியினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் பா.ஜ.கவை சேர்ந்த 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாநகராட்சியில் பா.ஜ.க கூட்டணியை சேர்ந்த 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் 66 இடங்களில் இது போன்று பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர். வேட்பு மனு பரிசீலனையின் போது ஆளும் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் தள்ளுபடியும் செய்யப்படவில்லை. ஆனால் அதிகமான எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




















