Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!"...
BB TAMIL 9 DAY 89: சான்ட்ராவுக்கு பாரு செய்த அநீதி; கம்முவுடன் இணைந்து அழிச்சாட்டியம் - ரெட் கார்டு?
முதல் சீசனில் கூட கார் டாஸ்க் நடந்தது. இந்த சீசனில் நடந்த அளவிற்கு கொடுமை அதில் இல்லை.
கார் டாஸ்க்கில் பாருவும் கம்ருதீனும் இணைந்து கொண்டு சான்ட்ராவை டார்கெட் செய்து bullying செய்ததும், தகாத வார்த்தைகளை கம்ருதீன் இறைத்ததும் அதன் உச்சமாக சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டதும் கொடூரமானது. இப்படித்தான் மற்ற சீசன்களில் விளையாடுவார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.
பாருவிற்கும் கம்முவிற்கும் ரெட்கார்ட் தரப்பட வேண்டும் என்பது பெரும்பாலோனோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது நடக்குமா?

இளமை இதோ இதோ என்கிற சாகாவரம் பெற்ற பாடலோடு புத்தாண்டு விடிந்தது. கில்லர் காயின் டாஸ்க்கில் நடந்த மாஸ்டர் பிளானைப் பற்றிய பேச்சு ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்தது. விக்ரம் இதன் மூளையாக இருந்து டாஸ்க்கை சொதப்பினாரா?
‘வினோத்தை துரத்தி விக்ரம் ஓடியது காமெடியாக இருந்தது’ என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கம்மு. “பணப்பெட்டியை தூக்கிடலாம்ன்னு பார்க்கறேன்” என்கிற ஐடியாவில் இருக்கிற பாரு, “இந்த வாரம் தாங்குவேனா” என்கிற சந்தேகத்தையும் கூடவே எழுப்பிக் கொள்கிறார்.
ஒருவருடன் நட்பில் இருக்கும் போது இனிமையான முகத்தைக் காட்டுவதும், அதில் சிறிது விரிசல் ஏற்பட்டால் கூட புறணி பேசுவதும் மோசமான குணாதிசயம். இதில் பாரு, கம்மு, சான்ட்ரா ஆகியோர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
சில நாட்கள் பாருவோடு நட்பாக இருந்த சான்ட்ரா, இப்போது பாருவைப் பற்றி விக்ரமிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார். “பிரஜினை பாரு சைட் அடிச்சிட்டே இருந்தா. என் கிட்டயே சொன்னா. செருப்பால அடிப்பேன்னு சொன்னேன்’ என்கிற வில்லங்கமான புறணியாக அது இருந்தது.
பிக் பாஸூம் விசேவும் தரும் டாஸ்க் தவிர, கம்முவும் பாருவும் இணைந்து வினோத்திற்கு ஒரு டாஸ்க் தந்தார்கள். ‘இந்த வீட்டில் போலியாக இருக்கும் நபர் யார். சதவீதம் என்ன?” என்பது கேள்வி. ஒவ்வொரு பதிலுக்கும் ‘நானும் அப்படித்தான் நெனச்சேன்” என்று வெடித்து சிரித்து கைதட்டிய பாரு, தன்னைப் பற்றிய விடைக்கு ‘என்னா ப்ரோ..” என்று முகம் மாறினார். மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வினோத், கடைசியில் “இதெல்லாம் சொல்லலாமா?” என்று வெள்ளந்தியாக கேட்டார். (மாட்டிக்கிட்டியே பங்கு!)

TTF7 துவங்கியது. க்விஸ் கேள்வி பதில். ‘பதில் தெரியலைன்னாலும் தெரிஞ்சா மாட்டி காட்டிக்கணுமாம்’ (இத நம்மாளுக நல்லா ஆடுவாங்களே?!). பொது அறிவுக் கேள்விகளில் போட்டியாளர்கள் உள்ளிட்டு நாம் எத்தனை பலவீனமாக இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த டாஸ்க்.
‘ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த மன்னன் யார்?’ என்கிற எல்கேஜி கேள்வியை சான்ட்ராவிடம் விக்ரம் வைத்தது புத்திசாலித்தனம். அவருக்குத் தெரியவில்லை. சாலென்ஜ் செய்த திவ்யாவும் தவறான பதில் சொல்லி அவுட் ஆனார்.
‘இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை’ என்கிற பாருவின் கேள்விக்கு ‘ஹவுரா பிரிட்ஜ்’ என்று சொல்லி காமெடி செய்தார் கம்மு. ‘காஷ்மீர் டூ கன்னியாகுமரி’ என்று பாரு சரியாக சொன்ன போது ‘ஆடு மேய்க்கற பையனுக்கு எம்பூட்டு அறிவு பாரேன்’ என்கிற மாதிரி வியந்தார் கம்மு. சாலென்ஜ் செய்த விக்ரம் அவுட்.
‘பிக் பாஸ் சீசன் 5 TTF வின்னர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘கம்ருதீன்’ என்று சொல்லி காமெடி செய்தார் சான்ட்ரா. தமிழக அரசின் சின்னத்தில் இருந்த கோவில் எது என்கிற கேள்விக்கான பதில் சபரியைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.
‘எந்த ஆற்றுப்படுகையில் கீழடி நாகரிக தொல்லியல் தளம் அமைந்துள்ளது?’ என்கிற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை ‘வைகைன்னு சொல்லி மனச உடைச்சிடாதீங்க” என்று சீன் போட்டார் பாரு. ‘ஆனா.. ஊனா. மதுரைப் பொண்ணுன்னு இழுத்து விட வேண்டியது. ஆனா இதுக்கு பதில் தெரியல’ என்று கிண்டலடித்த பிக் பாஸ் ‘வைகை’ என்கிற பதிலைச் சொன்னார்.

‘மகிழ்ச்சியான நாடு தாய்லாந்து’ - வினோத்தின் பதிலால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த பிக் பாஸ்
‘உலகின் மகிழ்ச்சியான நாடு எது?’ என்கிற கேள்விக்கு ‘தாய்லாந்து’ என்று வினோத் சொன்னவுடன் அதன் உட்பொருள் புரிந்து பலரும் சிரித்தார்கள். இந்தப் பதிலைக் கேட்டு பிக் பாஸாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வினோத் ஹாப்பியா இருந்த நாடு போல’ என்று திவ்யா அடித்த கமெண்ட்டிற்கு சான்ட்ராவிற்கு கிரெடிட் தந்தார் பிக் பாஸ். ஃபின்லாந்து என்பதுதான் சரியான விடையாம்.
இப்படியாக சென்ற இந்த டாஸ்க்கின் கடைசியில் அரோ வெற்றி பெற்றார். தமிழகத்தின் மாநில மரம் எது?’ என்கிற கேள்விக்கு பனைமரம் என்று சொல்லி அசத்திய அரோ வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்கிற கேள்வியெல்லாம் கடந்த சீசனிலேயே சீரழிந்தது.
TTF8 ஆரம்பித்தது. கார் டாஸ்க். ஒன்றாம் சீசன் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும். ஒரு குறுகலான காரில் போட்டியாளர்கள் அனைவரும் நுழைய வேண்டும். நெரிசல் தாங்காமல் யார் வெளியே வருகிறார்களோ, அவர்கள் அவுட்.
பஸ்ஸர் அடித்ததும் எல்லோரும் ஓடி வந்தார்கள். கம்ருதீன், வினோத், சபரி போன்றவர்கள் வேகமாக ஓடி வந்து வசதியான இருக்கைகளை ஆக்ரமித்தார்கள். தாமதமாக வந்த விக்ரமிற்கு இடம் கிடைக்காமல் உள்ளே பொருத்திக் கொள்ள முடியாமல் தவித்தார். அரேரா திவ்யாவின் மடியிலும் சுபிக்ஷா சான்ட்ராவின் மடியிலும், அரை டிக்கெட மாதிரி அமர்ந்து கொண்டார்கள். இருப்பதிலேயே வசதியான இடம் சான்ட்ராவிற்கு அமைந்தது. பிக் பாஸ் கூட இதை ‘கால் டாக்சில வர்ற மாதிரி இருக்கு’ என்று கிண்டல் செய்தார்.

சான்ட்ராவை தரக்குறைவாக பேசிய கம்ருதீன்
இதனாலோயோ என்னமோ, பாரு கம்ருதீனுக்கு காண்டாகியிருக்கலாம். ‘கார்ல தாய்லாந்து போகலாமா?’ என்று திவ்யா கேட்க, ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் போனது. அரோவின் சுமை தாங்காமல் திவ்யா கார் ஹாரனை மிதிக்க வேண்டியிருந்தது. சான்ட்ராவின் மடியில் இருந்த சுபிக்ஷா, டிக்கிக்கு நகர்ந்தது புத்திசாலித்தனமான செய்கை.
“அடேய் கம்மு. இப்பக் கூட ரொமான்ஸாடா” என்று கிண்டலடித்தார் விக்ரம். பாவம் தனது புஷ்டியான உடலை வளைத்து நெளித்து அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி இருக்க வேண்டியிருந்தது. “போன டாஸ்க்ல எங்களை அமுக்கிப் பிடிச்சீங்கள்ல.. நாங்க ரொமான்ஸ் பண்ணி தப்பிச்சிக்கறோம்” என்றார் பாரு. .
ஒரு கட்டத்தில் இந்த நகைச்சுவை மறைந்து பாருவும் கம்முவுடன் இணைந்து சான்ட்ராவை நோண்ட ஆரம்பித்தார்கள். “அவங்க எல்லா பிக் பாஸையும் பார்த்து தெளிவா திட்டத்தோட வந்திருப்பாங்க” என்று கம்மு ஆரம்பித்தார். தன்னை பிராடு என்று சொன்ன கோபத்தில் இருக்கும் சான்ட்ரா, கம்முவுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தார்.
“உங்களைத்தான் ஊரே பார்க்குதே.. வெளியே போய் பாருங்க புரியும்.” என்று சான்ட்ரா எரிச்சலுடன் சொல்ல, “அப்படி என்ன பண்ணிட்டாங்க?” என்று கம்மு மடக்க “காமருதீன்’ என்கிற புதிய சொல்லாடலை உருவாக்கினார் சான்ட்ரா. அதைக் கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் கம்முவிற்கு கடுப்பு வந்தது.
“சென்ற வார சான்ட்ரா.. ஸ்கேம்ட்ரா’.. என்று பதிலுக்கு பட்டப் பெயர் வைத்து நக்கலடித்த கம்மு ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனார். “போடா.. போடி… செருப்பு பிஞ்சிடும். மூஞ்சுல துப்புவேன்” என்று இரண்டு தரப்பிலும் வசைகள் பறந்தன. பாருவும் கம்முவின் அட்ராசிட்டிக்கு துணை போனார்.

சான்ட்ராவிற்கு பாரு செய்த அநீதி - கம்முவுடன் இணைந்து அழிச்சாட்டியம்
“எனக்கு எமோஷனல் சப்போர்ட்டா சான்ட்ரா இருந்தாங்க” என்று சொன்னவர் பாருதான். ஆனால் இப்போது கம்முவுடன் கூட்டணி அமைந்த துணிச்சலில் அவருடன் இணைந்து கொண்டு மகுடி ஊதிக் கொண்டிருந்தார் பாரு.
“எல்லை மீறி போறீங்கடா டேய்..” என்று சபரியும் வினோத்தும் கண்டித்தாலும் பாரு - கம்மு கூட்டணி அடங்குவதாக இல்லை. ஒரு கட்டத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியானார் சான்ட்ரா. ஆனால் கம்மு விடுவதாக இல்லை. சான்ட்ராவை டிரிக்கர் செய்து கொண்டேயிருந்தார்.
மடங்கி உட்கார்ந்திருந்த விக்ரமால் ஒரு கட்டத்தில் தாங்க முடியவில்லை. கால் மரத்துப் போக ஆரம்பித்ததால் இறங்க முடிவு செய்து விட்டார். பாயிண்ட்டா, காலா என்றால் கால்தான் முக்கியம்.
இப்போது கம்மு -பாருவிற்கு அமர இடம் கிடைத்திருக்கும். அப்போதாவது சண்டையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் விடவில்லை. ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலின் மெட்டை வைத்து ஒரு சிட்யூவேஷன் பாடலை உடனே இயற்றி சண்டையை கிண்டலடித்தார் வினோத்.
சான்ட்ராவின் குழந்தைகள், பிரஜின் அண்ணா.. என்று வாக்குவாதம் பர்சனல் விஷயங்களுக்குள் நகர்ந்தது. “உங்க குடும்பம் மட்டும் நல்லாயிருக்கணும்.. இன்னொரு பொண்ணு எப்படி போனா என்னவா..?” என்று தன் பங்கிற்கு பாருவும் சான்ட்ராவை விளாசினார்.
ஒரு கட்டத்தில் காரின் கதவைத் திறந்து சான்ட்ராவை வெளியே தள்ள முயற்சித்தார் பாரு. கூட கம்ருதீனும் உதவினார். பிடிவாதமாக கதவைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், சான்ட்ராவால் சமாளிக்க முடியாமல் வெளியே விழுந்து அழுகையுடன் கதறினார்.
விக்ரம் உடனடி உதவிக்கு ஓடி வந்தது கூட பெரிதில்லை. டாஸ்க்கில் இருந்த சபரியும் வினோத்தும் உடனே இறங்கி ஓடியது அதை விடவும் பெரியது.

“இது தப்பு பாரு.. செய்யக்கூடாது.. அவங்களா டயர்ட் ஆகி போகட்டும்” என்று திவ்யாவும் சுபிக்ஷாவும் அலறியும் பாரு கேட்கவில்லை. “நேத்து டாஸ்க்ல கீழே தள்ளிட்டு எல்லோரும் மேலே ஏறினீங்கள்ல?” என்று தனது தவறுக்கு நியாயம் கற்பித்தார்.
கில்லர் டாஸ்க்கில் ஒருவரை டார்கெட் செய்து மேலே அமுக்கிப் பிடித்தார்கள் என்றாலும் அதில் அடிபடாமல் பார்த்துக் கொண்டார்கள். அந்த டாஸ்க்கும் ஜாலியாகவே சென்றது. ஆனால் கார் டாஸ்க்கில் சான்ட்ராவை கடுமையாக கிண்டலடித்து விவகாரமான வார்த்தைகளை இறைத்து டென்ஷன் ஆக்கி பிறகு தள்ளி விட்டது குரூரமான செயல்.
‘பிக் பாஸ் ஷோக்களில் இது சகஜம்’ என்று இந்தக் கொடுமையை நார்மலைஸ் செய்ய முடியாது. ஒருவர் எப்படி வேண்டுமனாலும் வெற்றி பெறலாம் என்கிற காட்டுமிராண்டித்தனத்திற்கு நியாயம் கற்பிப்பது போல் ஆகி விடும்.
ஒருவேளை இப்படி நடந்திருந்தால் கூட பார்வையாளர்களுக்கு அதிகம் தாக்கமிருக்காது. காரின் உரையாடல் சகஜமாக சென்று ‘சான்ட்ரா.. இப்போ நாங்க உங்களை தள்ளி விடப் போறோம்.. ஜாக்கிரதையா இருங்க” என்று சொல்லி விட்டு ஸ்போர்ட்டிவ்வாக செய்தால் கூட இத்தனை தாக்கம் ஏற்பட்டிருக்காது.
சான்ட்ரா பதட்டத்தில் அதிர்ச்சியாகி மயங்கி விழ, மருத்துவக் குழு இணைந்து வந்தது. அவருக்கு உடனே உதவிய விக்ரம், வினோத், சபரிக்கு பாராட்டு. ஆண்கள் இறங்கி விட, பெண்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார்கள். பாருவின் செயலை கடுமையாக கண்டித்தார் திவ்யா.

சான்ட்ராவின் மயக்கம், ஒருவேளைா டிராமாவாகவே கூட இருக்கட்டும். அவரை இத்தனை கடுமையாக கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளை இறைத்து, தள்ளி விட்டது கொடுமையான செயல். இதற்காக பாரு மற்றும் கம்முவிற்கு ரெட் கார்ட் தந்தால் கூட அது நியாயமான முடிவாக இருக்கும்.
ஆனால் என்ன நடந்தாலும் டிஆர்பி முக்கியம் என்று இயங்கும் பிக் பாஸ் டீம், இந்த தார்மீகமான முடிவிற்கு செல்லுமா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த வார இறுதி விசாரணையில இதற்கான முடிவு தெரியும். பார்ப்போம்.
பாரு - கம்மு கூட்டணி செய்த அட்ராசிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



















