TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர...
Decode Jana Nayagan Trailer: 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? டிரெய்லரில் ஒத்துப்போகும் காட்சிகள் என்னென்ன?
விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல், இது பாலய்யா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனத் தகவலாகப் பேசப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இயக்குநர் அ.வினோத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "இந்தக் கதை ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்கோ, அதிலிருந்து லைட்டா சில சீன்களை எடுத்து ரீமேக் செய்திருக்காங்களோ, அல்லது அதில் உள்ள ஒரு சீனை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பாங்களோ... இப்படி எதுவாக வேணா இருக்கட்டும். இதைப் பத்தி படம் பார்க்க வர்றவங்க கவலைப்பட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இது ஒரு தளபதி படம்.
‘இது ரீமேக் படம்... நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். அப்புறம் ஏன் இதைப் பார்க்கணும்’ என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கும். இல்ல, சிலருக்குக் கோபம்கூட இருக்கும்.
அவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீங்க ஒரு ஷோ மட்டும் காத்திருங்க. அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிஞ்சிடும்.
அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளிவரும். அதில் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால ‘ஆமாம்’னும் சொல்ல முடியாது. ‘இல்லை’னும் சொல்ல முடியாது" என்றே கூறியிருந்தார்.

இந்த டிரெய்லரில் அமைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன.
'பகவந்த் கேசரி' படத்தில் பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரத்தின் பெயர், NBK என்ற விரிவாக்கமாக 'நீலகொண்டா பகவந்த் கேசரி' என வைத்திருப்பார்கள். அதுபோல, இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை 'தளபதி வெற்றிக் கொண்டான்' என மூன்று பெயர்கள் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள்.
அப்படத்தின் முதல் காட்சியில் பாலய்யா ஜெயிலில் இருப்பார். அதுபோன்றதொரு ஜெயில் காட்சிகள் இந்த டிரெய்லரிலும் இடம்பெற்றிருக்கின்றன. அப்படத்தில் பாலையாவின் வளர்ப்பு மகளாக வரும் ஶ்ரீலீலாவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி.
அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, 'ஜனநாயகன்' பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார்.
ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 'பகவந்த் கேசரி' படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார்.
அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

இதனைத் தாண்டி, 'பகவந்த் கேசரி' படத்தில் வரும் தொழிற்சாலை சண்டைக் காட்சி, கிராமப் பகுதி காட்சிகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாக டிரெய்லரில் சில காட்சிகள் இருக்கின்றன.
அத்துடன், அப்படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த விஷயங்கள், ரோபோ சண்டைக் காட்சிகள் இப்படத்தில் புதிதாகச் சேர்த்திருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, 'ஜனநாயகன்', 'பகவந்த் கேசரி' படத்தின் பாதி ரீமேக்தான் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
டிரெய்லர் பற்றிய உங்களுடைய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.



















