Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
`அவர்கள் நீதித்துறையின் அடித்தளம்; நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது!' - உச்ச நீதிமன்றம்
குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்கியதில் தவறு செய்த நீதிபதியை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து அந்த நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தார். இம்மனு நீதிபதிகள் பி.பர்திவாலா மற்றும் வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``அச்சமில்லாத நீதிபதிகளே சுதந்திரமான நீதித்துறையின் அடித்தளம். எனவே நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் செய்யும் தவறுக்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்க முடியாது.
நீதிபதிகளுக்கு எதிராக அற்பமான புகார்கள் தாக்கல் செய்யப்படுவது கவலையளிக்கிறது. இது ஜாமீன் தொடர்பான வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் தயக்கத்துடன் செயல்பட வழிவகுக்கிறது.

மேலும் ஒரு நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்போது, நீதித்துறையின் நற்பெயரைக் கெடுக்கும் கறுப்பு ஆடுகளை அகற்ற உயர் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். அதேசமயம் தவறான மற்றும் அநாமதேய புகார்களை எதிர்கொள்ளும் ஒரு நீதிபதியையும் அது பாதுகாக்க வேண்டும். ஓர் அச்சமற்ற நீதிபதிதான் சுதந்திரமான நீதித்துறையின் அடித்தளம் ஆகும்.
ஒரு நீதித்துறை அதிகாரிக்கு வழக்குகளில் தீர்ப்பளிக்கும் கடினமான கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல், வழக்கில் ஒரு தரப்பினர் தோற்று, அதிருப்தியுடன் திரும்புவார்கள். அவர்களில் பழிவாங்க விரும்பும் அதிருப்தியாளர்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பக்கூடும்.
விசாரணை நீதித்துறைக்கும் பெரும் பணிச்சுமை உள்ளதுடன், கடினமான பணிச்சூழல்களிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பட்டியலிடப்படுகின்றன. மேலும் பெரும்பாலான நீதித்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது தங்களால் இயன்ற மிகச் சிறந்ததை வழங்குகிறார்கள். முறையற்ற அல்லது உள்நோக்கம் கொண்ட புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டால், விசாரணை நீதித்துறையின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்படும்.
அச்சமின்றி கடமைகளை ஆற்றுவது கேள்விக்குறியாகும். ஒரு தவறான முடிவு என்பது நேர்மையான தீர்ப்புப் பிழையாக இருக்கலாம். ஒரு உத்தரவு தவறாக இருக்கிறது என்பதற்காகவோ அல்லது தீர்ப்பில் தவறு இருக்கிறது என்பதற்காகவோ, வேறு எந்தக் காரணமும் இல்லாமல், ஒரு நீதித்துறை அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது வழக்கு விசாரணையையோ எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தவறான குற்றச்சாட்டுகள் சரமாரியாகப் பாயும்போது, நீதித்துறை அதிகாரிகளால் எதிர்வினையாற்ற முடியாது. இந்த இடத்தில்தான் உயர் நீதிமன்றம் மிகுந்த எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்,” என்று கூறிய நீதிபதிகள் அந்த நீதித்துறை அதிகாரியைப் பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கான ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டனர்.


















