'இந்தியப் பொருட்களுக்கு 25% வரி' - அமெரிக்கா முன்மொழிவு; வர்த்தக ஒப்பந்தத்தால் 1...
'இந்தியப் பொருட்களுக்கு 25% வரி' - அமெரிக்கா முன்மொழிவு; வர்த்தக ஒப்பந்தத்தால் 17% ஆகக் குறையுமா?
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதிக்க முன்மொழிந்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், இந்த வரி விகிதம் 17 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏன் இந்த வரி? – அமெரிக்கா விளக்கம்
இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், “பல தசாப்தங்களாக, நமது வர்த்தகக் கூட்டாளிகளில் பல நாடுகள்,
> உற்பத்தித் துறையைக் குறிவைத்தல்,
> ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குதல்,
> நிதியுதவி மற்றும் பிற சலுகைகளை வழங்குதல்,

> சந்தை விதிகளுக்குப் புறம்பான உள்ளீடுகள் மற்றும்
> சந்தையைச் சீர்குலைக்கும் பிற நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட தொழில் கொள்கைகள்
போன்றவற்றைப் பின்பற்றி வருகின்றன.
இதனால் நிலவும் வர்த்தகச் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதோடு, அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தையும் சிதைத்து வருகின்றன.
மருந்துப் பொருட்கள், எஃகு (ஸ்டீல்) மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற துறைகளில் இந்தியா வர்த்தக உபரியை ஈட்டுகிறது.
இது சில முக்கியத் துறைகளில் இந்திய உற்பத்தியை நாம் சார்ந்திருப்பதை வெளிப்படுத்துகிறது” என்று நேற்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பதில்
இது குறித்து இந்திய வர்த்தக அமைச்சகம், “உற்பத்தித் துறைகளில் நிலவும் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி தொடர்பாக, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ‘பிரிவு 301’ (Section 301) விசாரணையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள தீர்மான அறிவிப்பு மற்றும் கருத்துக் கோரலை இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விசாரணை முழுவதும் இந்தியா ஆக்கப்பூர்வமான முறையில் பங்கேற்றது. விசாரணை தொடக்க அறிவிப்பிற்கான பதிலிலும், அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகளிலும், இந்தியாவில் எந்தவொரு துறையிலும் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் இல்லை என்பதை வர்த்தகத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
வர்த்தக ஒப்பந்தத்தில் ஏதேனும் சிக்கல்?
வர்த்தகம் தொடர்பான எந்தவொரு கவலைகளுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் வரம்பிற்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
2026-ம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடியும், பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு இணங்கவும்,
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.












