"அந்தத் தொகுதிகள்தாம் வேண்டும்" - அமைச்சர்களின் தொகுதிகளைக் கேட்டு கம்யூனிஸ்ட் க...
இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! - ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?
சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது.
இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 182 நாடுகள் இடம்பெறுகின்றன.
2025-ம் ஆண்டு வெளியான, 2024-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 38 புள்ளிகளைப் பெற்று 96-வது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்த ஆண்டு 39 புள்ளிகளைப் பெற்று 91-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மார்க் என்ன?
இந்த ரேங்கிங்கும் பள்ளித் தேர்வுகளைப்போல 100 மதிப்பெண்களுக்கானது தான். அதிக புள்ளிகள் பெறும் நாடு, ஊழலற்ற நாடு என்கிற அடிப்படையில் டாப் இடங்களைப் பெறும்.
இந்தப் பட்டியலில், உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 42 புள்ளிகள்.
இந்தியா 39 புள்ளிகள்தான் பெற்றிருந்தாலும், இது நல்ல முன்னேற்றமே.
இந்தியாவில் அதிகரித்துள்ள டிஜிட்டல் பொது கட்டமைப்பே ஊழலற்ற பட்டியலில் இந்தியா சற்று முன்னேறியதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஊழலற்ற டாப் நாடுகள் எது?
இந்தப் பட்டியலில் டென்மார்க் 89 புள்ளிகள் பெற்று டாப் இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஃபின்லாந்து மற்றும் சிங்கப்பூர் பெற்றுள்ளன.
உலகிலேயே அதிக ஊழல் மலிந்த நாடுகளாக சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 9 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளன.
அமெரிக்கா 64 புள்ளிகளுடன் 29-வது இடத்திலும், சீனா 43 புள்ளிகளுடன் 76-வது இடத்திலும், ரஷ்யா 22 புள்ளிகளுடன் 157-வது இடத்திலும், பாகிஸ்தான் 28 புள்ளிகளுடன் 136-ஆவது இடத்திலும் உள்ளன.

கவலைக்குரிய விஷயம்...
இன்னொரு பக்கம், ஊழல் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது கவலைக்குரிய விஷயம்.
குறிப்பாக, இந்தப் பட்டியலில் 50-க்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டுள்ள இந்தியா, பிரேசில், மெக்சிகோ, பாகிஸ்தான், இராக் நாடுகளில் உலக அளவில் பத்திரிகையாளருக்கு நடந்த 90 சதவிகிதக் கொலை நடந்திருக்கிறது.
















