"60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மரபணு மதுரையில் கிடைக்கிறது" - அமர்நாத்...
ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11).
இந்த 7 பேரும் அந்தியூர் அருகே கிணத்தடி சோளகா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
7 பேரும் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், 6 வயது சிறுவன் தர்ஷன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அழுததால், மற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 6 பேரும் சிறுவன் தர்ஷனை அழைத்துக் கொண்டு புதன்கிழமை காலை 6 மணியளவில் பள்ளியில் பாதுகாப்புக்காக இருந்த சமையலரிடம் தெரிவிக்காமல் வனப் பகுதி வழியாக தங்களது சொந்த ஊரான கொங்காடை மலைக் கிராமத்திற்குச் செல்லத் திட்டமிட்டு வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் 7 மாணவர்களும் பள்ளியில் இல்லாததை அடுத்து பேருந்து மூலம் ஊருக்குச் சென்று விட்டார்கள் என நினைத்து கொங்காடை மலை கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவன் தர்ஷனால் நடக்க முடியாததால், இரண்டு சிறுமிகள் தர்ஷனோடு வனத்துக்குள் இருந்துள்ளனர்.
மற்ற நான்கு சிறுவர்களும் அருகில் உள்ள காக்கையனூர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வனப்பகுதிக்குள்ளேயே இருந்துள்ளனர். தொடர்ந்து வெளியே வந்த சிறுவர்கள், வனப்பகுதிக்குள் மூவரும் இருப்பது குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையம் போலீஸார் மற்றும் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப் பகுதிக்குள் போலீஸார் மற்றும் வனத்துறையினர் 5 குழுக்களாகச் சென்று தேடினர்.
மேலும் ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும் தேடப்பட்டது. சுமார் 5 மணி நேர தேடலுக்குப் பிறகு இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் கோட்டமலை அடிவாரப் பகுதியில் இருந்ததைப் பார்த்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்சில் இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சிறுமிகள் மற்றும் சிறுவனை மீட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மகேஷ், நாகராஜ் மற்றும் ராஜா ஆகிய மூவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
சிறுத்தை, புலி, யானை உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை சுமார் ஐந்து மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மூவரும் பத்திரமாக மீட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



















