Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
``உங்கள் கனவை சொல்லுங்கள்' என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், உலக அரங்கில், இந்தியாவுக்கே ஒரு அடையாளமாக உள்ளது.
அத்தகைய நகரை, குப்பை நகராக மாற்றியதே தி.மு.க. அரசின் சாதனை. இந்தி மொழி வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருப்பூரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், இந்தியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாட்டுக்கு சென்றாலும், மோடியிடம் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். அந்தளவு நேர்மையும், தைரியமும் மிக்க மாபெரும் தலைவர் மோடி. அவருக்கு இங்கு கருப்புக் கொடி காட்டுகின்றனர்.
பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் மூவாயிரம் ரூபாய் முழுமையாக, டாஸ்மாக் கடைகளுக்கே செல்லகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஊழல் இல்லாத அரசு, டாஸ்மாக் இல்லாத, நல்லாட்சி தமிழகம் அமைய வேண்டும் என்கிற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப்போகிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், " பின்னலாடை வர்த்தகம் வாயிலாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருப்பூர் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. இத்தகைய நகரை, தி.மு.க அரசு, குப்பை நகராக மாற்றிவிட்டது. திருப்பூரிலுள்ள ஒரே ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். குப்பை அகற்றப்படாததால், மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவது தி.மு.க., கம்யூ., கட்சியினருக்கு கைவந்த கலை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறு ஷா என்கின்றனர் திமுகவினர். உங்களைப்போலவே எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அ.தி.மு.க., ஆட்சியை நிறைவு செய்த 2021ம் ஆண்டு வரை, தமிழகத்தின் மொத்த கடன், 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஆனால், தி.மு.க., அரசு, நான்கே ஆண்டுகளில், கூடுதலாக, 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர் மீதும், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் விழுந்துள்ளது. அப்படியிருக்க, தமிழகத்தை கடனில் தள்ளியதாக, அ.தி.மு.க., மீது வீண் பழி போடுகின்றனர். உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிற புதிய திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி போக வேண்டும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, நல்லாட்சி மலரவேண்டும் என்பதுதான், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கனவு" என்றார்.


















