Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!
டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார்.

அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.
நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது." எனக் குறிப்பிட்டார்.


















