பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை!" - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.
ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் மந்தனாவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், பலாஷ் முச்சல் பற்றி நிறைய பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட்டது.

இத்தகைய சூழலில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்தனா, ``திருமணம் ரத்தாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
அதோடு, இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள நினைப்பதாகவும், இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கோரிக்கை விடுத்த ஸ்மிருதி மந்தனா, ``எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன்" என்று உறுதியளித்தார்.
இந்த நிலையில் மந்தனா தனது நிலை குறித்து பேசியிருக்கிறார்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் நேற்று (டிசம்பர் 10) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மந்தனா, ``என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் காதலிக்கவில்லை.
அதனால், பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போதும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போதும் மனதில் வேறு எந்த எண்ணங்களும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இந்திய அணியின் ஜெர்சியை அணியும்போது நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம், நாட்டுக்காகப் போட்டியில் வெல்வது மட்டும்தான்.
ஜெர்சியை அணியும்போது அதில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்.
நான் எல்லோரிடமும் சொல்வது என்னவென்றால், ஜெர்சியை அணிந்ததும் உங்களின் பிரச்னைகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு களத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்.
ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர்.
அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது" என்று கூறினார்.
மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

நாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், நாம் அந்த வாக்குவாதங்களைச் செய்யவில்லையென்றால், களத்தில் நம்மால் வெற்றி பெற முடியாது.
ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும் வகையிலான விவாதங்களை நாம் செய்யவில்லையென்றால், அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில் நமக்குத் தேவையான அளவு ஆர்வம் இல்லை என்று அர்த்தம்.
எனவே, நாங்கள் நிச்சயமாக அந்த மாதிரியான விவாதங்களை மேற்கொள்கிறோம்" என்று மந்தனா தெரிவித்தார்.
டிசம்பர் 21-ம் தேதி தொடங்கும் தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















