செய்திகள் :

ஏபிசி ஜூஸ்... டர்மரிக் ஷாட்ஸ்... ஜூஸ் ஃபாஸ்ட்டிங்... ஆபத்து ஏற்படுத்தும் டீடாக்ஸ் உணவுகள்!

post image

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை கூகுள் டாக்டர்தான் பலருக்கும் அவசரகால ஆலோசகர். எந்தப் பிரச்னைக்கும் கூகுளில் தீர்வு தேடிக் கொண்டிருந்தவர்கள், இன்று இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைக் கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இன்ஃப்ளூயன்சர்களால் ‘ஓவர் ரேட்' செய்யப்படுகிற ஹெல்த் டிரெண்டுகளில், முன்னணியில் இருப்பவை டீடாக்ஸ் ஜூஸ் வகைகள்.

‘ஏபிசி ஜூஸ் குடித்தால் வெயிட்லாஸ் ஆகும், சருமம் தகதகவென மின்னும்', ‘பாகற்காயை அரைத்துக் குடித்தால் பத்தே நாள்களில் சர்க்கரைநோயிலிருந்து மீளலாம்', ‘சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஒரே வாரத்தில் பல கிலோ எடையைக் குறைக்கலாம்', ‘பச்சை மஞ்சளை அரைத்துக் குடித்தால் புற்றுநோய் குணமாகும்' என்றெல்லாம் ஆளாளுக்கு அள்ளிவிடும் அனைத்தையும் அப்படியே நம்பும் அறிவிலிகள் பெருத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே உடலில் நச்சு சேருமா... அதை வெளியேற்றுவதில் உணவுகள் உதவுமா... இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதை நம்பலாமா... இப்படி நமக்குள் பல கேள்விகள்...

‘‘டீடாக்ஸிஃபிகேஷன் (Detoxification) என்ற கான்செப்ட்டே தவறானது. மனித உடல் இயல்பிலேயே மிகத்திறமையான டீடாக்ஸ் அமைப்பைக்கொண்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் இரைப்பை, குடல் பாதை ஆகியவை உடலிலுள்ள நச்சுகளைத் தொடர்ந்து வெளியேற்றும் பணியைச் செய்துவருகின்றன. இந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் வரை, உடலை டீடாக்ஸ் செய்ய வேறெதுவும் தேவையில்லை. டீடாக்ஸ் செய்வதாக உத்தரவாதம் அளிக்கும் பானங்களோ, உணவுகளோ, நச்சு என்பது என்ன என்பதைச் சொல்வதே இல்லை. எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற விளம்பர உத்திதான் டீடாக்ஸிஃபிகேஷன் என்ற விஷயம். இவற்றில் எந்த பானமும், உணவும் உடலிலுள்ள நச்சுகளை நீக்காது. மாறாக, உங்கள் ஆரோக்கியத்தை பாதித்து, ஏற்கெனவே இருக்கும் உடல் உபாதைகளைத் தீவிரமாக்கும் அளவுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்...''

- எச்சரிக்கையோடு பேச ஆரம்பிக்கிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணரும், நரம்பியல் மருத்துவருமான சுதிர்குமார். மனித உடல் எப்படித் தன்னைத் தானே டீடாக்ஸ் செய்துகொள்கிறது, டீடாக்ஸ் உணவுகளின் பின்னாலுள்ள ஆபத்துகள், டிரெண்டாகும் ஏபிசி ஜூஸின் பின்னணி, ஜூஸ் ஃபாஸ்ட்டிங் செய்வதில் இருக்கும் ரிஸ்க் என்று பல விஷயங்களையும் விரிவாகப் பேசுகிறார் அவர்.

கல்லீரலும் சிறுநீரகமும்!

‘‘நம் உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளை ரத்தத்திலிருந்து பிரித்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் வேலையைக் கல்லீரல் செய்கிறது. சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு சுமார் 150 முதல் 180 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, ரத்தத்திலுள்ள யூரியா மற்றும் அதிகப்படியான உப்புகளைப் பிரித்து, சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலைச் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை, சிறுநீரகங்கள் செய்கின்றன. இந்த இரண்டு உறுப்புகளும் சரியாக வேலை செய்யும் வரை, உடலை டீடாக்ஸ் செய்ய வெளியிலிருந்து எந்த மேஜிக் ஜூஸும் உணவும் நமக்குத் தேவையில்லை.

உணவுகளுக்குத் தொடர்பில்லையா?

சில உணவுகள், டீடாக்ஸ் வேலையைச் செய்கிற உறுப்புகளை சப்போர்ட் செய்யுமே தவிர, விளம்பரங்களில் சொல்லப்படுவதைப் போல அந்த உணவுகள் நச்சுநீக்க வேலைகளைச் செய்வதில்லை. உதாரணத்துக்கு, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள், கல்லீரல் தன் வேலையைச் சிறப்பாகச் செய்வதில் உதவுகின்றன. பூண்டிலும் வெங்காயத்திலும் இருக்கும் சல்பர் சத்து, வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. பழங்கள், காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், செல்கள் சிதைவடைவதைத் தடுக்கின்றன. புரதச்சத்து, கல்லீரலின் இயக்கத்துக்கு வலுசேர்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்த உணவுகள் உடலின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்குமே தவிர, உடலிலுள்ள நச்சுகளை மேஜிக்போல வெளியே தள்ளுவதில்லை.

வெறும் வயிற்றில் வேப்பிலை ஜூஸ், பாகற்காய் ஜூஸ்!

ஆரோக்கியமாக இருப்பவர்கள், எப்போதாவது ஒரு முறை இந்தச் சாறுகளைக் குடிப்பதில் தவறில்லை. மற்றபடி, காய்கறி, கீரை, மூலிகைகளின் அடர்த்தியான சாற்றை அடிக்கடி குடிப்பது கல்லீரலை பாதிக்கும். பூங்காக்களின் வாசல்கள், நடைபாதைகளில் விற்கப்படும் கற்றாழை ஜூஸ், அருகம்புல் ஜூஸ் போன்றவற்றை தினமும் வாங்கிக் குடிக்கிற மக்கள் பலர் இருக்கிறார்கள். இவை தயாரிக்கப்படும் இடத்தின் சுகாதாரமின்மை, ஜூஸில் கலந்திருக்கக்கூடிய கிருமித்தொற்று, காய்கறி, கீரைகளில் தெளிக்கப்படுகிற பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் போன்றவை கவனிக்கப்படுவதில்லை. மூலிகைச் சாறுகளைக் குடித்ததால் கல்லீரல் பாதிப்புக்குள்ளான பலர் உண்டு. எனவே, இத்தகைய பானங்களைத் தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமானது அல்ல.

மஞ்சள் கிழங்கு நல்லதா?

‘டர்மரிக் ஷாட்ஸ்' (Turmeric Shots) முதல் ரெகுலர் சமையலுக்கு அரைத்துச் சேர்ப்பது வரை, பச்சை மஞ்சள் பயன்பாடும் சமீபகாலமாக சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களால் பிரபலமாகிவருகிறது. மஞ்சள் தூள் நல்லது என்கிறபோது, பச்சை மஞ்சளும் நல்லதுதானே என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. மஞ்சளைத் தூளாகப் பயன்படுத்துவதற்கும், கிழங்காக அரைத்துப் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மஞ்சள் தூள் எனும்போது, சமையலுக்கு அதை மிகச் சிறிய அளவே பயன்படுத்துவோம். அதுதான் பாதுகாப்பானதும்கூட. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், செல்கள் சிதைவடைவதைத் தடுக்கவும் உதவுகிறது. ஆனால், மஞ்சள் கிழங்கிலோ, சப்ளிமென்ட்டிலோ குர்குமின் அளவு அதிகமிருக்கும். அது வயிறு தொடர்பான பிரச்னைகளையும், கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். வேறு பிரச்னைகளுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளுடன் வினைபுரிந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஏபிசி ஜூஸ்... ஏன் இவ்வளவு மவுசு?

ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலவையான ஏபிசி ஜூஸும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களின் புண்ணியத்தால் கடந்த சில வருடங்களில் மிகவும் டிரெண்டாகியிருக்கிறது. ‘அதிக ஊட்டச்சத்துகொண்டது, டீடாக்ஸ் செய்யும், சரும நிறம் தகதகவென மின்னும்’ என்றெல்லாம் அதற்குப் பல பேர் உத்தரவாதம் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றிலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றை ஜூஸாக்கும்போது நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டு, அவற்றிலுள்ள இயற்கையான சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. ஆரோக்கியமான நபர்கள், எப்போதாவது ஒரு முறை ஏபிசி ஜூஸ் குடிப்பதில் பிரச்னையில்லை. நீரிழிவு, உடல்பருமன், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, சிறுநீரகக் கற்கள் பிரச்னை, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டிலுள்ள ஆக்ஸலேட்டும், பொட்டாசியமும் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.

ஏபிசி மால்ட் எடுத்துக்கொள்ளலாமா?

தினமும் ஏபிசி ஜூஸ் செய்து குடிக்க முடியாதவர்களுக்கான மாற்றாக ஏபிசி மால்ட் என்பதும் சமீப ஆண்டுகளில் பிரபலமாகி யிருக்கிறது. அதே ஆப்பிள், பீட்ரூட், கேரட்டைப் பதப்படுத்தி, காயவைத்து, பொடித்து, சர்க்கரை சேர்த்து பவுடராக்கி, `சத்து பானம்’ என்ற பெயரில் விற்கிறார்கள். காய்கறிகளையும் பழங்களையும் இப்படி பவுடராக்கும்போதே, அவை அதீதமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக மாறிவிடுகின்றன. நார்ச்சத்தே இல்லாத, இனிப்பான, செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த வகை மால்ட்டுகளை ஆரோக்கிய பானங்களாக விளம்பரம் செய்வதை ஏற்கவே முடியாது.

ஜூஸ் குடித்தால் எடை குறையுமா?

வெறும் ஜூஸ் மட்டுமே குடித்து எடையைக் குறைக்கும் ‘ஜூஸ் ஃபாஸ்ட்டிங்' முறையை இன்று பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த டயட் எந்தப் பலனையும் தருவதில்லை. வெறும் ஜூஸாகக் குடிக்கும்போது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு என எதுவும் கிடைப்பதில்லை. நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், ஜூஸ் ஃபாஸ்ட்டிங் செய்வது மிகப்பெரிய ஆபத்து. ஜூஸ் குடிப்பதால் எடை குறைவதாகச் சொல்வோர், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த எடைக் குறைப்பு, கொழுப்பு குறைந்ததற்கான அடையாளமல்ல... அது வெறும் நீரிழிப்பே. கல்லீரல் மற்றும் தசைப்பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இயற்கையான சர்க்கரைச் சத்து (Glycogen) குறைவதன் விளைவே அது. ‘போதுமான கலோரியும் புரதச்சத்தும் கிடைக்காததால், தசைகளிலுள்ள புரதம் (Muscle Protein) சிதைவடைவதால் ஏற்பட்ட மாற்றமே இது’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஜூஸ் ஃபாஸ்ட்டிங்கைப் பின்பற்றிவிட்டு, மீண்டும் வழக்கமான உணவுமுறைக்கு மாறும்போது, இழந்த எடை மீண்டும் கூடும். உடல் மெலிய குறுக்குவழிகள் கிடையாது. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உண்மையான பலன் தரும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்க முடியுமா?

ஏற்கெனவே சொன்னதுபோல, சிறுநீரகங்களே அந்த வேலையைச் செய்துவிடும். சிறுநீரகங்கள் சரியாக இயங்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வளர்ந்த நபர்கள், நாளொன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த அட்வைஸும் வானிலை, அந்தந்த நபரின் உடலியக்கம், உடல்நிலையைப் பொறுத்து மாறலாம். உலகின் ஆகச்சிறந்த ஆரோக்கியமான, பாதுகாப்பான திரவம் சுத்தமான தண்ணீர் மட்டுமே!

நீண்டகால டீடாக்ஸ் சிகிச்சைகள் என்ன செய்யும்?

போதுமான புரதச்சத்து இல்லாமல் தசையிழப்பு ஏற்படும். வளர்சிதை மாற்றம் மந்தமாகும். ரத்தச் சர்க்கரை அளவில் ஏற்ற, இறக்கங்கள் சீரின்றித் தொடரும். உடலிலுள்ள உப்புகளின் சமநிலை (Electrolyte Imbalance) சீர்குலைந்து, உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.

டீடாக்ஸ் மார்க்கெட்டிங்... தடுக்க என்னதான் வழி?

டீடாக்ஸ் விளம்பரங்கள் எல்லாமே ஆரோக்கிய அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் விஷயம். டீடாக்ஸ் செய்வதாகச் சொல்லும் விளம்பரங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அப்படி உத்தரவாதம் தரும் தயாரிப்புகளுக்கு அறிவியல்பூர்வ ஆதாரங்களைக் கட்டாயமாக்க வேண்டும். மக்களிடையே விஞ்ஞானரீதியான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சோஷியல் மீடியாவின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய விஷயங்களைப் பின்பற்றுவதற்கு முன்பு, ‘இதற்கு அறிவியல்ரீதியான ஆதாரம் இருக்கிறதா?' என்ற கேள்வியை மக்கள் கேட்கப் பழக வேண்டும்.''

- நிதர்சனம் உணர்த்தி நிறைவு செய்கிறார், டாக்டர் சுதிர்குமார்.

ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி... அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் - திருச்சியில் கலக்கிய போட்டியாளர்கள்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம்ஆக... மேலும் பார்க்க