ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக வெடிக்கும் டி காக்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.
20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ரிக்கல்டன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஆனால், முதல் இரு போட்டிகளில் 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்த டி காக், இப்போட்டியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஆடத் தொடங்கினார்.
கேப்டன் டெம்பா பவுமா சப்போர்ட் இன்னிங்ஸ் ஆட மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார் டி காக்.
இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தபோது பவுமா அவுட்டானார். இருப்பினும் தனது ஆட்டத்தை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார்.
இது டி காக் ஓய்வைத் (Retirement) திரும்பப் பெற்று வந்த பிறகு தனது 6-வது போட்டியில் அடிக்கும் இரண்டாவது சதம்.
2023-ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி காக், கடந்த செப்டம்பரில் தனது ஓய்வைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார்.

அந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் இரண்டு அரைசதம், ஒரு சதம் என ODI கரியரில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் அவுட்டாகி வந்த டி காக் இன்றைய போட்டியில் சதமடித்து 106 ரன்களில் அவுட்டானார்.
இந்த சதத்துடன் சச்சின், ரோஹித் ஆகியோரின் சாதனைகளைச் சமன்செய்ததோடு மேலும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
சாதனைப் பட்டியல்!
* ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களாக, தலா 7 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் (UAE), சயீத் அன்வர் (UAE), ஏபி டிவில்லியர்ஸ் (இந்தியா), ரோஹித் சர்மா (இங்கிலாந்து) ஆகியோர் இருந்த நிலையில், டி காக் இன்று இந்தியாவில் அடித்த 7-வது சதத்தின் மூலம் மேற்குறிப்பிட்டவர்களின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 6 சதங்களுடன் கில்கிறிஸ்ட் (இலங்கை), சங்ககாரா (இந்தியா) ஆகியோர் முதலிடத்தில் இருந்த நிலையில், அவர்களை டி காக் ஓவர்டேக் செய்து முதலிடத்துக்கு வந்திருக்கிறார்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை டி காக் சமன் செய்திருக்கிறார். ஆனால், சனத் ஜெயசூர்யா இந்தியாவுக்கெதிராக 89 ஒருநாள் போட்டிகள் ஆடியிருக்கிறார். டி காக் இந்தியாவுக்கெதிராக வெறும் 23 போட்டிகள்தான் ஆடியிருக்கிறார்.
* ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 23 சதங்களுடன் 10 வருடங்களாகத் தனியாளாக முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் டி காக் இன்று தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 23-வது சதத்தை அடித்து சங்ககாராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.



















