ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு - பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதும் போராட்டம் நடத்துவதும் வழக்கம். இவர் சமீபத்தில் கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காரியாமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் பணியாளர்களுக்காக ஷெட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவரது தரப்பு அங்கு சென்றனர். கடப்பாரை உள்ளிட்டவை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓஎன்ஜிசி-யை வெளியேற வலியுறுத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள், பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வாஞ்சிநாதன் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அதன்படி பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றவர்களுக்கும் இதேபோல் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















