Oh Butterfly Review: பெண்ணின் உளவியல் சிக்கல்களைப் பேசும் கதை; சுவாரஸ்யம் சேர்க்...
ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் நேர் எதிரியான திமுகவில் ஐக்கியமானது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக மதுரையில் உள்ள திருமங்கலத்தில் வரும் 7-ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் விழாவையும் நடத்த உள்ளார்.
இந்நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
குறிப்பாக கடமலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த ஓ,பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். மதுரையில் இணைப்பு விழா நடைபெறும் நிலையில் ஆதரவாளர்கள் கூட்டாக அதிமுகவில் சேரத் தொடங்கியுள்ளது ஓ.பி.எஸ் தரப்பில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ இணைப்பு விழாவிற்கான வேலைகளில் மும்மரம் காட்டி வருகிறார். காரணம் தான் திமுகவில் இணைந்துள்ளது குறித்து தன்னுடைய ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் இணைப்பு விழாவை நடத்தாமல் மதுரையில் நடத்துவதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நம்மிடயே பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர், “திரும்பவும் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பு அமையும் என்று தான் காத்திருந்தோம். ஆனால் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கவில்லை.
கட்சியில் சேர்ந்ததோடு ஒவ்வொரு அமைச்சரையும் இவரே நேரில் சென்று சந்திக்கிறார். அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை அவர்கள் தானே வந்து சந்திக்க வேண்டும். இது அவரோடு சேர்ந்து எங்களையும் மரியாதை குறைவாக நடத்துவது போல உள்ளது, மரியாதை இல்லாமல் இருக்க முடியாது என அதிமுகவில் சேர்ந்து விட்டோம்.

நாங்கள் அதிமுகவில் சேர்வதை முன் கூட்டியே தெரிந்து கொண்டே மதுரையில் கூட்டத்தை நடத்துகிறார். ஏனெனில் தற்போது அவருடைய ஆதரவாளர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதனால் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனியில் இணைப்பு விழா நடத்தினால் கூட்டத்தை கூட்ட முடியாது என மதுரைக்கு மாற்றியிருக்கிறார். அங்கு இணைப்பு விழாவை நடத்தினால் அமைச்சர்கள் மூர்த்தி, பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் கோ.தளபதி ஆகியோரே கூட்டத்தை கூட்டி விடுவார்கள் இதனால் தனக்கு பிரச்சனை வராது என நினைத்தே மதுரையில் இணைப்பு விழாவை நடத்துகிறார்” என்றனர்.













