கடைசி நேரத்தில் உடல்நலம் பாதிப்பு: மகனுக்காக மீண்டும் மாணவியாக மாறி, ஐஐடி கனவை ந...
கடைசி நேரத்தில் உடல்நலம் பாதிப்பு: மகனுக்காக மீண்டும் மாணவியாக மாறி, ஐஐடி கனவை நிறைவேற்றிய தாய்!
தனது மகனின் மருத்துவ அவசர நிலையிலும் அவனது ஐஐடி (IIT) கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவனது அறிவியல் மற்றும் பொறியியல் வகுப்புகளில் ஒரு தோழியைப் போல ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு தனது மகனின் கனவை ஒரு பெண் நிறைவேற்றி இருக்கிறார்.
பீகார் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் இரண்டு ஆண்டுகளாக ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், தேர்வு நெருங்குவதற்குச் சற்று முன்பு அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
நிமோதோராக்ஸ் ( நுரையீரல் செயலிழப்பு) பாதிப்பு கண்டறியப்பட்டதால், அவர் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இதனால் அவரால் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது தாய் தனது மகனுக்காக களமிறங்கினார். மகனின் படிப்பு தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, அவர் குஞ்சனுக்காக ஆன்லைன் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தார். அதே நேரத்தில் அந்த வகுப்புகளைத் தானும் கவனித்து, விரிவான குறிப்புகளைத் தயாரித்தார்.
பி.எட் (B.Ed.) பட்டப் படிப்பை முடித்த இல்லத்தரசியான குஞ்சா, தனது மகனுடன் கோட்டாவில் வசித்து வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார்.
குஞ்சன் கடுமையான பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார். 70 சதவீதத்திற்கும் அதிகமான பார்வைக் குறைபாடு கொண்ட அவர், 9.5 பவர் (power) கொண்ட கண்ணாடியை அணியவேண்டிய நிலையில் இருந்தார்.
இந்த சவால்களுக்கு மத்தியிலும், அவர் தன் தாயின் உதவியால் ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண் பெற்றார். ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில், மாற்றுத்திறனாளி ஓபிசி பிரிவில் (PWD OBC Category) 50-வது ரேங்கையும், பொதுவான மாற்றுத்திறனாளி பிரிவில் (Common PWD) 120-வது ரேங்கையும் பெற்றார். தற்போது அவர் ஐஐடி டெல்லியில் (IIT Delhi) கணினி அறிவியல் (Computer Science) பிரிவில் சேர்ந்துள்ளார்.
தேர்வு முடிவுகள் குறித்து குஞ்சன் கூறுகையில், "சூழ்நிலைகள் எப்போதும் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. தேர்வுகள் அறிவை மட்டுமல்ல, நமது தைரியத்தையும் சோதிக்கின்றன. கோட்டா ஆலன் பயிற்சி மையத்தில் படித்து ஐஐடி-ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நான் உறுதியாக முடிவெடுத்திருந்தேன். அதற்காக எனது முழு முயற்சியையும் கொடுத்தேன். நான் நோய்வாய்ப்பட்டபோது, தேர்வுக்கு முன்பு என் தாயார் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றதாக இருந்தது" என்றார்.
குஞ்சனின் தாயார் குஞ்சா கூறுகையில், "என் மகனின் கனவே என் கனவு. அவனுக்காக நான் குறிப்புகளைத் தயாரித்தேன். அந்த குறிப்புகள் இறுதியில் அவன் தேர்வுக்கு தயாரானபோது அவனுக்கு உதவியது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது" என்றார்.


















